சட்டமன்ற தேர்தல் 2026: மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணிகள் எப்படி நடக்கும்? - முழு விவரம்!
மயிலாடுதுறை மாவட்டத்தில் மே 4-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் 4 அடுக்கு பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

மயிலாடுதுறை: தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026-ன் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், பதிவான வாக்குகளை எண்ணுவதற்கான ஆயத்தப் பணிகள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின், முன்னிலை வகித்தார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வாக்கு எண்ணிக்கையின் போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு
கடந்த ஏப்ரல் 23-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி (160), மயிலாடுதுறை (161) மற்றும் பூம்புகார் (162) ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்தவுடன், அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் (EVM) மயிலாடுதுறை, ஏ.வி.சி. பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் (Strong Room) வைக்கப்பட்டு, தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
தற்போது அந்த மையத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் மாநில காவல்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வாக்கு எண்ணிக்கை மைய விவரங்கள்
எதிர்வரும் மே 4-ம் தேதி (04.05.2026) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்காக ஏ.வி.சி. பொறியியல் கல்லூரியில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சீர்காழி தொகுதி: 14 மேசைகள் அமைக்கப்பட்டு 21 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும்.
மயிலாடுதுறை தொகுதி: 14 மேசைகள் அமைக்கப்பட்டு 21 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும்.
பூம்புகார் தொகுதி: 14 மேசைகள் அமைக்கப்பட்டு 24 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும்.
வாக்கு எண்ணும் பணியில் மொத்தம் 69 கண்காணிப்பாளர்கள், 84 உதவியாளர்கள் மற்றும் 75 நுண் பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எந்த அலுவலர் எந்த மேசையில் பணியாற்றுவார் என்பது வாக்கு எண்ணிக்கை நாளன்று காலை 5.00 மணிக்குத் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் கணினி மூலம் குலுக்கல் முறையில் (Randomization) தீர்மானிக்கப்படும்.
முகவர்களுக்கான கடும் கட்டுப்பாடுகள்
வாக்கு எண்ணிக்கையின் போது வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர் சில முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்:
1. காலை 8.00 மணிக்கு முதலில் அஞ்சல் வாக்குகள் (Postal Ballots) எண்ணப்படும். 8.30 மணிக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
2. இடமுகவர்கள் (Counting Agents) தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மேசைகளில் மட்டுமே அமர வேண்டும்.
3. வாக்கு எண்ணும் அறைக்குள் கைப்பேசி, கேமரா உள்ளிட்ட எந்தவொரு மின்னணு சாதனங்களையும் எடுத்துச் செல்ல அனுமதியில்லை.
4. முகவர்கள் பேனா, பென்சில், வெற்று காகிதம் மற்றும் படிவம் 17சி-ன் நகலை மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவர்.
5. ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு, வேட்பாளர்களின் முகவர்களுக்கு நகல் வழங்கப்படும்.
வசதிகள் மற்றும் கண்காணிப்பு
வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு மேசையும் வெப் கேமரா (Web Camera) மூலம் நேரலையாகக் கண்காணிக்கப்படும். மேலும், அங்கு வரும் பணியாளர்கள் மற்றும் முகவர்களுக்காகக் குடிநீர், சுகாதாரம் மற்றும் அவசர மருத்துவ வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். பூங்கொடி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் விஷ்ணுபிரியா (மயிலாடுதுறை), சுரேஷ் (சீர்காழி), கீதா (பூம்புகார்), துணை காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மற்றும் ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் முத்துவடிவேல், குமரையா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
வாக்கு எண்ணிக்கை அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெற அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
ட்ரெண்டிங் செய்திகள்




















