Mamata - Priyanka: வயநாட்டில் களமிறங்கும் பிரியங்கா காந்தி: மம்தா பரப்புரை? எதிர்பார்க்காத ட்விஸ்ட்!
Priyanka Gandhi: காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றதை துறந்ததையடுத்து, அங்கு அவரின் சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடவுள்ளார்.
Mamata Banerjee - Priyanka Gandhi: வயநாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்திக்கு ஆதரவாக, மேற்கு வங்க முதலமைச்சர் பரப்புரை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வயநாட்டில் பிரியங்கா காந்தி:
கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். ராகுல் காந்தி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த சூழ்நிலையில், தேசிய அரசியலில் கவனம் செலுத்தும் வகையிலும், இந்தியாவின் வடக்கு பகுதியில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் வகையிலும் ரேபரேலி தொகுதியை தக்க வைத்து கொண்டார். இதையடுத்து, வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார்.
பரப்புரைக்கு தயாராகும் மம்தா?:
இந்நிலையில், அத்தொகுதியில் ராகுல் காந்தியின் சகோதரியும், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இந்த தேர்தலானது, பிரியங்கா காந்தி சந்திக்கும் முதல் தேர்தலாகும். இந்த தருணத்தில்,பிரியங்கா காந்தியை ஆதரித்து, பரப்புரை மேற்கொள்ள, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வர உள்ளதாக அரசியல் வட்டாரத்தின் நெருக்கமான தகவல் தெரிவிக்கின்றன.
வலுவடையும் இந்தியா கூட்டணி:
இந்தியா கூட்டணியில் , காங்கிரஸ் கட்சிக்கும் மம்தா பானர்ஜிக்கும் இடையே வெளியில் தென்படாத மோதல் போக்குகள் இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டன. இந்நிலையில் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக மம்தா பானர்ஜி பரப்புரை முடிவு எடுத்துள்ளது, காங்கிரஸ் கட்சியுடனான மோதல் போக்கு நீங்கி இருக்கிறது என்றும், இந்தியா கூட்டணி மேலும் வலுவடைகிறது என்றும் உணர முடிகிறது.