Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 5ம் கட்ட வாக்குப்பதிவு, இன்று 49 தொகுதிகளில் நடைபெறுகிறது.
Lok Sabha Election Phase 5 Polling: நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் ஐந்தாம் கட்டத்தில், 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு நடைபெறுவதை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு:
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. அதன்படி, மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 379 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிவுற்றது. முதல் மூன்று கட்ட வாக்குப்பதிவுகள் முறையே 66.14 சதவீதம், 66.71 சதவீதம் மற்றும் 65.68 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. நான்காம் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 64 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பரப்புரை கடந்த 18ம் தேதியுடன் நிறைவுற்றது.
49 தொகுதிகளில் வாக்குப்பதிவு?
6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 49 தொகுதிகளில், இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதில் பீகாரைச் சேர்ந்த 5 தொகுதிகள், ஜம்மு & காஷ்மீரைச் சேர்ந்த ஒரு தொகுதி, லடாக் தொகுதி, ஜார்கண்டைச் சேர்ந்த 3 தொகுதிகள், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 13 தொகுதிகள், ஒடிசாவைச் சேர்ந்த 5 தொகுதிகள், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 14 தொகுதிகள் மற்றும் மேற்குவங்கத்தைச் சேர்ந்த 7 தொகுதிகள் அடங்கும். இதனிடையே, ஒடிசாவில் உள்ள 35 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள், மீதமுள்ள இரண்டு கட்ட வாக்குப்பதிவும் நிறைவடைந்த பிறகு வரும் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.
#WATCH | West Bengal: Poll preparations begin at a polling booth in Howrah for the fifth phase of Lok Sabha elections to be held today.
— ANI (@ANI) May 20, 2024
Polling will be held on 7 seats of West Bengal today, as part of phase 5 of #LokSabhaElections2024 pic.twitter.com/hxJedWOhcF
தொகுதி விவரங்கள்:
மாநிலம்/யூ.டி | தொகுதிகள் |
பீகார் | சீதாமர்ஹி, மதுபானி, முசாபர்பூர், சரண், ஹாஜிபூர் (SC) |
ஜம்மு & காஷ்மீர் | பாரமுல்லா |
லடாக் | லடாக் |
மகாராஷ்டிரா | துலே, டிண்டோரி, நாசிக், கல்யாண், பால்கர், பிவாண்டி, தானே, மும்பை வடக்கு, மும்பை வடமேற்கு, மும்பை வடகிழக்கு, மும்பை வட-மத்திய, மும்பை தெற்கு-மத்திய, மும்பை தெற்கு |
ஒடிசா | பர்கர், சுந்தர்கர், போலங்கிர், கந்தமால், அஸ்கா |
உத்தரப்பிரதேசம் | மோகன்லால்கஞ்ச் (SC), லக்னோ, அமேதி, ரேபரேலி, ஜலான், ஜான்சி, ஹமிர்பூர், பண்டா, கௌசாம்பி (SC), பாரபங்கி (SC), பைசாபாத், கைசர்கஞ்ச், கோண்டா |
மேற்கு வங்காளம் | பங்கான், பாரக்பூர், ஹவுரா, உலுபெரியா, ஸ்ரீராம்பூர், ஹூக்ளி, ஆரம்பாக் |
ஜார்கண்ட் | சத்ரா, கோடர்மா, ஹசாரிபாக் |
ஏற்பாடுகள் தீவிரம்:
9 லட்சத்து 47 ஆயிரம் தேர்தல் பணியாளர்கள் இன்றைய வாக்குப்பதிவு பணியில் ஈடுபட்டுள்ளனர். 4 கோடியே 69 லட்சம் ஆண்கள், 4 கோடியே 26 லட்சம் பெண் வேட்பாளர்கள் மற்றும் ஐயாயிரத்து 409 மூன்றாம் பாலினத்தவர்கள் என, மொத்தம் 8 கோடியே 95 லட்சம் பேர் இன்று வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் 7 லட்சத்து 81 ஆயிரம் பேர் 85 வயதை கடந்தவர்கள் மற்றும் 24 ஆயிரத்து 792 பேர் 100 வயதை கடந்தவர்கள் ஆவர். அவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனிடயே வாக்குச்சாவடி மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
நட்சத்திர வேட்பாளர்கள்:
உத்திரபிரதேசத்தின் அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் காங்கிரஸின் கே.எல்.சர்மா போட்டியிடுகின்றனர். ராகுல் காந்தி ரேபரேலியில் களம் காண்கிறார். லக்னோவில் இருந்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பீகாரில் இருந்து லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகினி ஆச்சார்யா ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக அறியப்படுகின்றனர். மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் டாக்டர் ஸ்ரீகாந்த் ஷிண்டே கல்யாண் தொகுதியிலும், மும்பை வடக்கிலிருந்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மூத்த வழக்கறிஞர் உஜ்வல் நிகம் மற்றும் மும்பை வடமத்தியத்தில் மும்பை பிராந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வர்ஷா கெய்க்வாட் போட்டியிடுகின்றனர்.