Lok Sabha Election Results: ஸ்மிருதி இரானி முதல் எல்.முருகன் வரை.. தோல்வியைச் சந்தித்த மத்திய அமைச்சர்கள்!
Lok Sabha Election Results 2024: ஸ்மிருதி இரானி தொடங்கி ராஜீவ் சந்திரசேகர் வரை பல மத்திய அமைச்சர்கள் இந்த மக்களவை தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளனர்.
மக்களவை தேர்தல் முடிவுகள் பெரும் ஆச்சரியத்தை சில கட்சிகளுக்கும், அதிர்ச்சியை சில கட்சியினருக்கும் தந்துள்ளன. கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கும் விதமாக முடிவுகள் வந்திருக்கின்றன. 370 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகளில் சொல்லப்பட்டது.
ஆனால், பாஜகவுக்கு தற்போது தனிப்பெரும்பான்மை கூட கிடைக்கவில்லை. அதை விட முக்கியமான விஷயம் என்னவென்றால் பெரும்பாலான இடங்களில் பாஜக மூத்த தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் தோல்வியை சந்தித்துள்ளனர். பின்னடைவை சந்தித்து வருகின்றனர். அவர்கள், யார்? என்று தற்போது பார்க்கலாம்.
ஸ்மிருதி இரானி:
கடந்த 2019 ஆம் ஆண்டு ராகுல் காந்தியை தோற்கடித்து அமேதி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மாவிடம் 1.39 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். நேரு குடும்பத்தின் நெருக்கமானவராக கருதப்படுபவர் கிஷோரி லால் சர்மா.
அஜய் மிஸ்ரா தெனி:
மத்திய உள்துறை இணை அமைச்சராக இருப்பவர் அஜய் மிஸ்ரா தெனி. கடந்த 2021ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் மீது காரை ஏற்றி வன்முறையில் ஈடுபட்டதாக இவரது மகன் கைது செய்யப்பட்டார். கெரி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த உத்கர்ஷ் சர்மாவிடம் தோல்வியை தழுவினார்.
அர்ஜூன் முண்டா:
ஜார்க்கண்டின் குந்தி மக்களவைத் தொகுதியில் மத்திய பழங்குடியின விவகாரத்துறை அமைச்சரும், சிட்டிங் எம்.பி.யுமான அர்ஜுன் முண்டா, காங்கிரஸ் வேட்பாளர் காளிசரண் முண்டாவிடம் தோல்வியை தழுவியுள்ளார்.
ராஜீவ் சந்திரசேகர்:
கேரளாவின் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூரிடம் தோல்வியை தழுவினார்.
வி. முரளிதரன்:
கேரளாவில் அட்டிங்கல் தொகுதியில் போட்டியிட்ட மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளிதரன், காங்கிரஸ் கட்சியின் சிட்டிங் எம்.பி. அடூர் பிரகாஷிடம் தோல்வியை சந்தித்துள்ளார். தோல்வியை சந்தித்தது மட்டுமின்றி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.
எல். முருகன்:
தமிழ்நாட்டில் நீலகரி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட எல். முருகன், முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆ. ராசாவிடம் தோல்வி அடைந்துள்ளார். 4 லட்சத்து 73 ஆயிரத்து 212 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
மகேந்திர நாத் பாண்டே, சாத்வி நிரஞ்சன் ஜோதி உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் தோல்வி அடைந்துள்ளனர்.
இதையும் படிக்க: பெரும்பான்மையை தவறவிட்ட இந்தியா கூட்டணி.. இந்த 3 மாநிலங்கள்தான் காரணம்? - ஓர் அலசல்