Lok Sabha Election Result 2024: வாங்கோ! வாங்கோ! மாநில கட்சி அந்தஸ்து பெறும் வி.சி.க., நாம் தமிழர் - தொண்டர்கள் குஷி
Lok Sabha Election Result 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், விடுதலை சிறுத்தைகள் மற்றும் நாம் தமிழர் கட்சி மாநில அந்தஸ்து பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
Lok Sabha Election Result 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், வி.சி.க. போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகள்:
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. பாஜக கூட்டணி 290 இடங்களிலும், எதிர்க்கட்சிகள் அடங்கிய I.N.D.I.A. கூட்டணி 230 இடங்களிலும் மட்டுமே முன்னிலை வகிக்கின்றன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை பொறுத்தவரை, மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது.
நாம் தமிழர் கட்சி வெற்றியை ஈட்டாவிட்டாலும், கடந்த தேர்தல்களை காட்டிலும் அதிகப்படியான வாக்குகளை பெற்றுள்ளன. அதனடிப்படையில் திமுக கூட்டணியில் உள்ள விசிக மற்றும் நாம் தமிழர் கட்சிகள், மாநில அந்தஸ்து பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநில அந்தஸ்து பெறுவதற்கான தகுதிகள்:
கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை பூர்த்தி செய்தாலே, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிக்கு மாநிலக் கட்சியாக அங்கீகாரம் வழங்கப்படும்
- சட்டப் பேரவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன் 2 சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
- மக்களவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன், ஒரு மக்களவை தொகுதியில் வெற்றி பெற வேண்டும்.
- சட்டப்பேரவை தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
- மக்களவை தேர்தலில் ஒவ்வொரு 25 தொகுதிக்கும் ஒரு தொகுதியில் வெற்றி பெற வேண்டும்.
- மாநிலத்தில் பதிவாகும் ஓட்டுக்களில் குறைந்தபட்சம் 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும்.
மாநில கட்சியாகிறது விசிக:
கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 6 இடங்களில் போட்டியிட விசிக, திருப்போரூர், செய்யூர், காட்டுமன்னார்கோவில் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில் மக்களவை தேர்தலிலும் 2 தொகுதிகளில் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. சிதம்பரத்தில் திருமாவளவன் 5 லட்சம் வாக்குகள் பெற்று ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், விழுப்புரத்தில் ரவிக்குமார் 4.77 லட்சம் வாக்குகள் பெற்று 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.
இதனால் மேற்குறிப்பிடப்பட்ட, தேர்தல் ஆணையத்தின் பெரும்பலான நிபந்தனைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி பூர்த்தி செய்துள்ளது. இதனால், திமுக, அதிமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் வரிசையில், விசிகவும் மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெற உள்ளது.
மாநில கட்சி அந்தஸ்து பெறும் நாம் தமிழர் கட்சி:
கடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, 3.9 சதவிகித வாக்குகளை பெற்றது. இம்முறையும் தனித்து போட்டியிட்டதோடு, கரும்பு விவசாயி சின்னமும் இன்றி களமிறங்கியது. இதனால், போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்து இருந்தாலும், பல தொகுதிகளில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.
அதாவது சுமார் 8 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை, அக்கட்சி பெற்றதாக கூறப்படுகிறது. இதனால், மாநிலத்தில் பதிவாகும் ஓட்டுக்களில் குறைந்தபட்சம் 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும் என்ற நிபந்தனையை பூர்த்தி செய்து, நாம் தமிழர் கட்சியும் மாநில அந்தஸ்து பெறும் நிலையை எட்டியுள்ளது. இது அக்கட்சி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.