தமிழக மக்களை வஞ்சித்து வரும் பாஜக, அதற்கு துணைநின்ற அதிமுகவை வாக்காளர்கள் புறக்கணிக்க வேண்டும் - செல்வப்பெருந்தகை
தமிழகத்தில் தற்போதைய மின் கட்டண உயர்வுக்கு முந்தைய அதிமுக அரசே காரணம் - தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை குற்றச்சாட்டு.
நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, எடப்பாடி அடுத்த இருப்பாளி பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு, சேலம் பாராளுமன்ற தி.மு.க வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
பின்னர், கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வ பெருந்தகை, "தமிழக தமிழகத்தில் தற்போதைய மின் கட்டண உயர்வுக்கு, முந்தைய அ.தி.மு.க ஆட்சியாளர்களே முழு காரணம் எனக் கூறினார். முந்தைய அ.தி.மு.க ஆட்சி காலத்தில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட உதை மின் திட்டத்தில் தமிழகம் இணைந்ததின் பலனாகவே தற்போது தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இக்கட்டான உயர்வுக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அப்போதைய மின்துறை அமைச்சர் தங்கமணி ஆகிய இருவருமே முக்கிய காரணம் என்ன குற்றம் சாட்டினார். மேலும் கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி பொறுப்பில் இருந்து வரும் பாரதிய ஜனதா அரசு, பல பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றியுள்ளது. குறிப்பாக 2 கோடி இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு சாதாரண மக்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்ற அறிவிப்பு, பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை குறைப்பு உள்ளிட்ட போலியான அறிவிப்புகளை கொடுத்து. மக்களை ஏமாற்றிய பாரதிய ஜனதா அரசு நாட்டில் உள்ள தனியார் பெரு நிறுவனங்களுக்கு துணையாக இருந்து வந்துள்ளது. பாரதிய ஜனதா ஆட்சி காலத்தில் இந்தியாவிலுள்ள ஒரு குறிப்பிட்ட நிறுவனம் மட்டுமே பெருமளவு லாபமடைந்துள்ளது” என்றார்.
மேலும், “தமிழகத்தையும் தமிழ் மக்களையும் நேசிப்பதாக கூறும் பிரதமர், கடந்த டிசம்பர் மாதத்தில் தமிழகம் மழை வெள்ளத்தால் பாதிப்பிற்குள்ளான போது எந்த ஒரு நிவாரணமும் அளிக்காமல் தமிழ் மக்களை ஏமாற்றியது குறிப்பிடத்தக்கது. முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்த வரிக் கொள்கையில் பல்வேறு முறையீடுகளை செய்து ஏழை எளியவர்கள் பாதிப்பிற்கு உள்ளாகும் வகையில் மத்தியில் உள்ள பா.ஜ.க அரசு செயல்பட்டு வருகிறது. அதே சமயம் தற்போது தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் வரும் தி.மு.க அரசு, தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள 80 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. குறிப்பாக காங்கிரஸ் ஆட்சி காலத்தில் காமராஜர் முதல்வராக இருந்து நாட்டிற்கே முன்னுதாரணமாக மதிய உணவை கொண்டு வந்தது போல், தி.மு.க அரசால் கொண்டுவரப்பட்ட காலை உணவு திட்டம் நாடு முழுவதும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் தி.மு.க அரசின் மகளிருக்கான உரிமை தொகை திட்டம், நான்முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், இன்னுயிர் காக்கும் 48 திட்டமிட்டம். உள்ளிட்ட தி.மு.க அரசின் திட்டங்களால் தமிழக மக்கள் பயன் பெற்று வருவதாக கூறினார். ஆனால் பெண்களையும், தமிழக மக்களையும் வஞ்சித்து வரும் பாரதிய ஜனதா கட்சியும் அதற்கு துணை நின்ற அ.தி.மு.கவையும் வாக்காளர்கள் புறக்கணித்து, இந்திய கூட்டணி வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.