Lok Sabha Election 2024: புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளரை வெற்றிபெற வைப்பது கடமை - முதல்வர் ரங்கசாமி
Lok Sabha Election 2024 Puducherry: கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியின் 14-ம் ஆண்டு தொடக்கவிழா நடந்தது.
பாஜக போட்டியிட சம்மதம்
புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் ரங்கசாமி தலைமையிலான புதுச்சேரி அமைச்சரவையில் என்.ஆர். காங்கிரசும், பா.ஜனதாவும் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் பாஜக போட்டியிடும் என்ற தகவல் வெளியானது. இதை உறுதி செய்யும் வகையில் பாஜக மேலிட பார்வையாளர் நிர்மல்குமார் சுரானா தேசிய ஜனநாயக கூட்டணி தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமியை சந்தித்து பேசினார். அப்போது முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக போட்டியிட சம்மதம் தெரிவித்திருந்தார்.
என்ஆர்.காங்கிரஸ் கட்சி ஆண்டு விழா
கடந்த 2 நாட்களுக்கு முன்பு என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆண்டுவிழா தொடர்பான ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமியிடம், கட்சி நிர்வாகிகள், பாராளுமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தினர். கட்சி ஆண்டு விழாவின் போது முடிவு தெரிவிப்பதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார். இதனால் பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் போட்டியிடுவார் என்ற கேள்வி எழுந்தது. இதற்கு இன்று என்ஆர்.காங்கிரஸ் கட்சி ஆண்டு விழாவில் பதிலளித்து முற்றுப்புள்ளி வைத்தார்.
வெற்றிக்கு முழு மனதோடும், பலத்தோடும் பணியாற்ற வேண்டும்
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியின் 14-ம் ஆண்டு தொடக்கவிழா நடந்தது. விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி, நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சி (பாஜக) போட்டியிடுகிறது. கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றிக்கு முழு மனதோடும், பலத்தோடும் பணியாற்றி வெற்றி பெறச்செய்ய வேண்டும். இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். கட்சி ஆட்சி அமைந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். மாநில வளர்ச்சிக்காக என்.ஆர். காங்கிரஸ் கட்சி பாடுபட்டுள்ளது. இதையெல்லாம் மக்களிடம் எடுத்துக்கூறி என்.ஆர்.காங்கிரசார் தேர்தல் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா போட்டியிடுவதை முதலமைச்சர் ரங்கசாமி உறுதி செய்துள்ளார். தொண்டர்களிடையே நிலவி வந்த சந்தேகங்களுக்கும் முதலமைச்சர் ரங்கசாமி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்