Lok sabha election 2024: இறுதியாகாத அதிமுக கூட்டணி..! கலக்கத்தில் உத்தேச வேட்பாளர்கள்..! வெளியூர் வேட்பாளர்கள் எடுத்த முடிவு ?
ADMK ALLIANCE: வாய்ப்புள்ள வெளியூர் வேட்பாளர்கள் பின்வாங்கும் மனநிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத் தேர்தல்
இன்னும் சில நாட்களில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது கூட்டணி குறித்த முடிவுகளை அறிவித்து வருகின்றனர். இந்திய அளவில் ' இந்தியா ' கூட்டணியை எதிர்க்கட்சிகள் தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்பே உருவாக்கப்பட்டது. ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி இந்தியா முழுவதும், 'தேசிய ஜனநாயக கூட்டணியை' வலுப்படுத்தும் பணியை துவங்கியுள்ளது. மறுபுறம் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தங்களது வேட்பாளர் பட்டியலையும் வெளியிட துவங்கியுள்ளனர்.
தமிழ்நாடு கூட்டணி நிலவரம் என்ன
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தேசிய கட்சிகளை தாண்டி மாநில கட்சிகளுக்கு அதிக செல்வாக்கு உள்ளது. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு மாநில கட்சிகளும் தமிழ்நாடு முழுவதும் அமைப்புகளை கொண்ட கட்சியாக இருக்கின்றன. இதனால் நாடாளுமன்றத் தேர்தலிலும், இரண்டு கட்சிகளை முன்னிறுத்தி கூட்டணிகள் அமைவது வழக்கமாக உள்ளது. ஆனால் இந்த தேர்தலில் அதிமுக தங்களது, கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் தவித்து வருவது அதிமுக நிர்வாகிகளிடையே, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கூட்டணி நிலவரம் என்ன ?
திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்தியன் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குமக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்டவை உள்ளன இடம் பெற்றுள்ளன. திமுக, தன்னுடைய கூட்டணி கட்சிக்கு 19 தொகுதிகளை விட்டுக் கொடுத்துள்ளது. மீதமுள்ள 21 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு கூட்டணி கட்சிகளுக்கு 20 இடங்களை ஒதுக்கிய நிலையில் இந்த முறை ஒரு இடம் குறைத்து ஒதுக்கீடு செய்துள்ளது. காங்கிரசுக்கு 10 தொகுதிகளும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தல இரண்டு தொகுதிகளும், விடுதலை சிறுத்தை கட்சிக்கு இரண்டு தொகுதிகளும், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றிற்கு தல ஒரு தொகுதியும் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சியிற்கு ஒரு மாநிலங்கள் அவை உறுப்பினர் சீட் ஒன்றை ஒதுக்கி தனது கூட்டணியை இறுதி செய்து தேர்தல் பணியை திமுக தொடங்கியுள்ளது. காங்கிரசைத் தவிர திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளையும், உறுதி செய்துள்ளதால் கூட்டணி கட்சிகள் மற்றும் திமுகவினர் தேர்தல் பணியை தொடங்கியுள்ளனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் மட்டும் திமுக கூட்டணி தோல்வி அடைந்திருந்தது, இம்முறை 39 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டுமென்ற நோக்கத்துடன் திமுக தனது தேர்தல் வேளையை துவங்கி உள்ளது.
அதிமுக கூட்டணி
ஆளும் கட்சியாக அதிமுக இருந்த பொழுது, பாமக, பாஜக, தமாக, புதிய தமிழகம், தேமுதிக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை வைத்து மெகா கூட்டணி உருவாக்கி இருந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தாலும், 2019இல் நடைபெற்ற பல்வேறு சட்டமன்ற இடைத்தேர்தலில் தேவையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இதன் பிறகு நடைபெற்ற 2021 சட்டமன்ற பொது தேர்தலில் தேமுதிக மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறினாலும், பிரதான கட்சிகளை அதிமுக தக்கவைத்துக் கொண்டது. இதனால் 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக அதிமுக ஆட்சியில் இருந்த பொழுதிலும், 66 அதிமுக கூட்டணி 75 இடங்களில் பிடித்திருந்தது.
சிக்கி தவிக்கும் அதிமுக
இந்தநிலையில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அறிவித்து, பாஜக இல்லாத கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தது. அதிமுக தரப்பில் இருந்து பாமக, தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தொடர்ந்து நிலையான வாக்கு வங்கியை வைத்திருக்கும் பாமக அதிமுக பக்கம் செல்லும் என கருதப்பட்ட நிலையில், பாமக இதுவரை எந்தவித நிலைப்பாட்டையும் எடுக்காமல் இருப்பது அதிமுகவினருக்கு தலைவலியை அதிகரித்துள்ளது. தேமுதிக மற்றும் அதிமுக அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை துவங்கி இருந்தாலும் இதுவரை அவர்கள் கூட்டணியும் உறுதி செய்யப்படாமல் உள்ளது. அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் மட்டுமே தங்களது கூட்டணியை உறுதி செய்திருப்பதால், கூட்டணியை இறுதி செய்ய முடியாத சூழலில் அதிமுக தலைமை சிக்கித் தவித்து வருகிறது. பாஜகவிற்கும் இதே சிக்கல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கட்டாயம் வென்றாக வேண்டிய தேர்தல்
அதிமுகவின் பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கி கட்சியை தனது செல்வாக்கின் கீழ் கொண்டு வந்துள்ளார். எனவே இந்த தேர்தலில் குறைந்தபட்சம் 10 நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று தனது செல்வாக்கை கட்சியினர் மத்தியில் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளார். ஆனால் கடந்த இரண்டு தேர்தலை போல கூட்டணியை விரைவாக உறுதி செய்ய முடியாததால், போட்டியிட வாய்ப்புள்ள வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வட தமிழ்நாட்டில் பாமக கூட்டணி உறுதியாகவில்லை என்றால் , போட்டியிட வேண்டாம் என்ற முடிவில் சில வேட்பாளர்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
வேட்பாளர்கள் அச்சமடைவது எதற்காக ?
யாரையும் பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தாமல், அதிமுகவின் சாதனை மற்றும் திமுக ஆட்சியின் குறைகளை கூறி மட்டுமே வாக்கு கேட்க வேண்டும் என்பதால், மிகவும் குறிப்பிட்ட சதவீத பொது மக்களின் வாக்குகள் மட்டுமே கிடைக்கும். எனவே கூடுதல் வாக்குகளை பெற வேண்டும் என்றால் கூட்டணி அவசியம் என உத்தேச பட்டியலில் இருக்கும் வேட்பாளர்கள் நினைக்கின்றனர். வடதமிழ்நாட்டில் செல்வாக்காக பாமக இணைந்தால், 15- க்கும் மேற்பட்ட தொகுதிகளில் குறைந்தது ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் அதிமுக கூட்டணிக்கு கிடைக்கும் என நம்புகின்றனர். இதேபோன்று தேமுதிக அணிந்தாலும் தமிழ்நாடு முழுவதும் ஒரு குறிப்பிட்ட வாக்குகள் கிடைக்கும் என்பதால், இந்த இரண்டு கட்சிகளை கூட்டணியில் அதிமுக இணைத்தால் மட்டுமே, பிரம்மாண்ட கூட்டணி அமைத்திருக்கும் திமுகவிற்கு எதிராக வெற்றி பெற முடியும் என அதிமுக வேட்பாளர்கள் நம்புகின்றனர்.
வெளியூர் வேட்பாளர்கள் நிலைமை ?
அதிமுக சார்பில் சில தொகுதிகளுக்கு வெளியூர் வேட்பாளர்கள் போட்டியிட உள்ள கூட்டணி உறுதி செய்து கட்சி பணியை தொடங்கினால் மட்டுமே அவர்களால், தேர்தல் பணி செய்ய முடியும். கூட்டணியை உறுதியாகாமல் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதால் , உத்தேச பட்டியலில் இருக்கும் வெளியூர் வேட்பாளர்களும் தொகுதி பக்கம் எப்பொழுது செல்வோம், பணிகளை எப்பொழுது துவங்குவது, என்ற குழப்பத்தில் உள்ளனர். ஒரு சில வெளியூர் வேட்பாளர்கள் இன்னும் சில நாட்களில் கூட்டணி முடிவாகி, தேர்தல் பணி துவங்கப்படவில்லை என்றால் பின்வாங்கி விடலாம் என்ற யோசனையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.