Lok Sabha Election 2024: திமுக கூட்டணியில் வேட்பாளர் திடீர் மாற்றம்.. அந்த வீடியோதான் காரணமா?
Lok Sabha Election 2024: நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தார்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்றத்தின் மக்களவை தேர்தல் தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் 40 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதல் கட்ட தேர்தலான ஏப்ரல் 19 ஆம் தேதியே வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 20 ஆம் தேதி மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் நடைமுறை தொடங்கியது. மார்ச் 27 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 28 ஆம் தேதி வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், 30 ஆம் தேதி வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாளாகும். வேட்பு மனுவை தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணி
40 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணியில் அக்கட்சி 21 இடங்களிலும், காங்கிரஸ் 10 இடங்களில் போட்டியிடுகிறது. இதேபோல் சிபிஐ, சிபிஎம், விசிக கட்சிகளுக்கு தலா 2 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளுக்கு தலா ஒரு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தார்.
வேட்பாளர் மாற்றம்
ஆனால் சூரிய மூர்த்தி நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாக வீடியோ ஒன்று வைரலாக பரப்பப்பட்டது. அதில் சாதி ரீதியிலாக கருத்துகளை தெரிவித்திருந்தார் எனவும், இவரை வேட்பாளராக திமுக கூட்டணி நிறுத்தியிருக்கிறது என சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் பொய்யான வீடியோ என்றும், தான் அப்படியெல்லாம் பேசவில்லை எனவும் வீடியோ வெளியிட்டு சூரிய மூர்த்தி விளக்கம் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக சூரியமூர்த்தி மக்களவை தேர்தலுக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் திரும்ப பெறப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மாதேஷ்வரன் என்பவர் போட்டுயிடுவார் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி அறிவித்துள்ளது. இவர் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிடுகிறார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் திடீரென அறிவிக்கப்பட்ட வேட்பாளர் மாற்றப்பட்டதற்கு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் அந்த பழைய வீடியோ தான் காரணம் என சொல்லப்படுகிறது.