(Source: ECI/ABP News/ABP Majha)
Lok Sabha Election 2024: வலுக்கும் இந்தியா கூட்டணி.. அவநம்பிக்கையை வென்ற தமிழ்நாட்டின் நம்பிக்கை..
இந்தியா கூட்டணி தேர்தல் வரை தாங்காது எனும் கருத்தும் வலுவாக பகிரப்பட்டு வந்தது.
கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இந்திய ஊடக பரப்பில் இந்த தேர்தலில் பாஜக பிரம்மாண்டமாக வெல்லும் எனும் நம்பிக்கையே உறுதியாக இருந்தது. தேர்தல் வெறும் சடங்கு மட்டுமே என நம்பினார்கள் அல்லது மக்களை அவ்வாறு நம்புவதற்குத் தயார் செய்தார்கள். ராமர் கோயில் திறப்பு என்பது வட இந்திய ஓட்டுக்களை மொத்தமாக அறுவடை செய்யும் என எதிர்த்தரப்பில் கூட நம்பும் அளவுக்கு செய்திகள் விநியோகம் செய்யப்பட்டது. கூடுதலாக, இந்தியா கூட்டணி தேர்தல் வரை தாங்காது எனும் கருத்தும் வலுவாக பகிரப்பட்டு வந்தது. அதை உறுதி செய்யும் படியான கருத்துக்கணிப்பு முடிவுகள் பல்வேறு ஊடகங்களில் வெளிவந்தன.
எல்லா தேசிய தொலைக்காட்சிகளும் ஆளுங்கட்சியை விமர்சனம் செய்யாமல் எதிர்க்கட்சிகளுக்கு செய்தி வெளியிடும்போக்கு, செய்தித்துறையைப் பொறுத்தவரை, உலகிலேயே முதல்முறையாக இந்தியாவில் தான் நடக்கிறது என்ற எண்ணமும் எழாமல் இல்லை.
எம்.எல்.ஏ, எம்.பிக்களை விலைக்கு வாங்குவது அறமற்ற அரசியல் என தலையங்கங்கள் தீட்டப்பட்டு வந்த காலம் போய் ஊடக விவாதங்களில் அவை எதிர்க்கட்சிகளில் சாமர்த்தியமின்மை என்பதான கண்ணோட்டங்கள் கூச்சம் இல்லாமல் வெளிப்பட்ட காலம் இதுதான் என்று அரசியல் விமர்சகர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
மான்டேக் சிங் அலுவாலியா எனும் திட்ட கமிஷன் அதிகாரி மன்மோகன்சிங் காலத்தில் தனது அலுவலக ஓய்வறையை 20 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பித்த செய்தி, பல நாட்கள் ஊடகங்களால் விவாதிக்கப்பட்டன. இன்று அதே செய்தியறைகளில் கட்டிய ஓராண்டு காலத்தில் பயன்பாட்டிற்கு தகுதி இல்லாததாக மாறிய டெல்லி பாலம் (கட்டுமானச் செலவு 770 கோடி ரூபாய்) குறித்த செய்தி ஒரு நிமிடத்திற்கு மேல் உயிரோடு இருக்கவில்லை என்பது மிகுந்த வருத்தமே.
இந்த சூழல் என்பது ஒரு தனி மனிதனின் கைகளை கட்டிப்போட்டு போருக்கு அனுப்பிய நிலையை எதிர்க்கட்சிகளுக்கு கொடுத்தது என்றால் மிகையல்ல. இந்தியா கூட்டணியை ஒருங்கிணைத்த நிதிஷ்குமார் பாஜகவை நோக்கி ஓடுவதற்கு இதுவும் ஒரு காரணி என்றும் வட இந்தியாவின் சூழல் இத்தனை கடினமானதாக இருந்த போதிலும், தமிழ்நாட்டில் மட்டும் பாஜகவிற்கு எதிரான அரசியல் என்பது அதன் வீரியத்திலிருந்து சற்றும் குறையாமல் தகித்துக்கொண்டே இருந்தது என்றும் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இன்னும் சொல்லப்போனால் தமிழக அரசியலில் மையப்புள்ளியாக பாஜக எதிர்ப்பு இருந்தது என்று சொல்லலாம். அதிமுக மீதான ஆகப்பெரும் கறையாக அவர்களது பாஜக விசுவாசமே பிரச்சாரம் செய்யப்பட்டது. மோடியைப் பார்த்து யார் அதிகம் சிரித்தது என பிரச்சாரக் கூட்டங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் வார்த்தை போர் வெடிக்கும் அளவுக்கு பாஜக சார்பு என்பது ஒரு அரசியல் நெருக்கடியாகவே கட்சிகளால் பார்க்கப்பட்டது.
தமிழ்நாட்டில் உங்களால் வெல்லவே முடியாது என, ராகுல் காந்தி நரேந்திர மோடிக்கு பாராளுமன்றத்திலேயே சவால் விடும் அளவுக்கு நிலைமை இருந்தது. பாஜக 400 தொகுதிகளை வெல்லும் என பெரும்பான்மை இந்திய மக்கள் நம்பும் சூழல் ஏற்படுத்தப்பட்ட போதும் தமிழ்நாடு தன் நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை என அரசியல் வல்லுநர்கள் உறுதிபட தெரிவிக்கின்றனர்.
ஒரு வகையில் தமிழகத்தின் இந்த கொள்கை உறுதியே வெறும் இரண்டு மாதங்களில் பாஜகவின் 400+ பிரச்சாரத்தை இன்று தேசிய அளவில் முறியடிக்கவும் பல்வேறு அரசியல் நோக்கர்கள் பாஜகவின் வெற்றி அவர்கள் நினைத்தது போல இலகுவானது இல்லை என பேசவும் காரணமாக அமைந்திருக்கிறது.
காரணம் ஒரு வலுவான கூட்டணி பாஜகவை வீழ்த்தும் எனும் நம்பிக்கை தமிழகத்தில் அமைந்த திமுக கூட்டணியால் பிற மாநில கட்சிகளுக்கு கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் உருவாகும் எதிர்ப்பு அலை என்பது இந்தியாவின் அரசியல் போக்கை மாற்றி விடக்கூடும் எனும் அச்சம் நீண்ட காலமாகவே பாஜகவிற்கு உண்டு என்பதே நிதர்சனம்.
அதன் காரணமாகவே அவர்கள் தமிழகத்திற்கு என்று தனிப்பட்ட கவனச்சிதறல் உத்திகளை கையாண்டார்கள். புதிய புதிய சமூக ஊடக கண்டண்ட்டுகளை பாஜக தமிழ்நாட்டுக்கு தொடர்ச்சியாக வழங்கியது. அதன் நோக்கம் ஒன்றே ஒன்றுதான் "தமிழ்நாட்டில் ஒரு பிரச்சனை தொடர்ந்து ஊடகங்களில் விவாத பொருளாக இருந்துவிடக் கூடாது".
அண்ணாமலையின் பிரஸ்மீட் முதல் நரேந்திர மோடியின் வருகை வரை எல்லாவற்றுக்கும் இருந்த முதன்மை நோக்கம் கவனத்தை திசை திருப்புவது மட்டுமே.
இத்தனை வேலைகளையும் கடந்து தமிழகத்தில் பாஜக எதிர்ப்பு உறுதியாக இருந்தது. பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம் என அதிமுக தரப்பில் இருந்து இரண்டாம் கட்ட தலைவர்கள் சொன்னால்கூட அதன் தொண்டர்களும் செய்தி தொடர்பாளர்களும் பாஜகவுக்கு எதிரான கருத்துக்களை அள்ளிக் கொட்டுவார்கள். அண்ணாமலையால் கூட்டணியை முறித்துக் கொண்டோம் என அதிமுக சொன்னாலும் அந்த கூட்டணியை முறித்துக் கொள்வதற்கு அண்ணாமலை வாயை அதிமுக பயன்படுத்திக் கொண்டது என்பதுதான் எதார்த்தம். அதிமுக கூட்டணி முறிந்தது மட்டுமல்ல மற்ற கட்சிகளை கூட்டணிக்கு கொண்டு வருவதிலும் பாஜக கடும் நெருக்கடிகளை சந்தித்தது.
இந்த போக்கை தொடர்ந்துதான் தமிழ்நாட்டிற்கு வெளியேயும் பாஜக எதிர்ப்பு சட்டென்று வேர் பிடிக்க துவங்கியது. பிற மாநிலங்களிலும் அவர்களால் ஒரு உறுதியான கூட்டணியை அமைக்க முடியவில்லை. பாஜகவின் ஆகப்பெரும் நம்பிக்கையான உத்திர பரதேசத்தில் வேலைவாய்ப்பின்மை பூதாகரமான பிரச்சனையாக உருவெடுத்தது. சில ஆயிரம் கான்ஸ்டபிள் பணிக்காக 50 லட்சம் இளைஞர்கள் எழுதிய தேர்வு அங்கே ரத்து செய்யப்பட்டது பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது.
துருவ் ரத்தி எனும் இளைஞர் பாஜகவை விமர்சிக்கும் வீடியோக்களை வெளியிட அவை கோடிக்கணக்கான பார்வைகளை கடந்தது. நிர்மலா சீதாராமனின் கணவர் பரகல பிரபாகர் பாஜக அரசுக்கு எதிரான கடுமையான விமர்சனங்களை முன்வைத்து இந்த நெருப்பில் எண்ணெய் ஊற்றினார். அந்த கட்சியின் 30க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் அல்லது இன்றைய எம்பிக்கள் போட்டியிலிருந்து பின் வாங்கினார்கள். ராஜபுத்திரர்கள் குறித்து பாஜக வேட்பாளர் ஒருவர் மோசமான விமர்சனத்தை வைத்ததால் அது ஒருபுறம் பெரும் நெருக்கடியாக பாஜகவை சுற்றுகிறது.
ஆம் ஆத்மிக்கும் காங்கிரசுக்கும் இயல்பாக இருந்த முரண்பாட்டை கெஜ்ரிவால் கைதின் மூலம் சீர் செய்தது பாஜக. இது தேவையில்லாத வேலை என்று சில வலதுசாரி ஆட்களே விமர்சனம் செய்தார்கள். மகாராஷ்டிராவில் பல்வேறு உடைப்பு வேலைகளைக் கடந்தும் இந்தியா கூட்டணிக்கு பிரகாசமான வாய்ப்பு இருப்பதை பாஜக ஆதரவு ஊடகங்களே வெளிப்படுத்த வேண்டிய நிலை உருவானது. இவை எல்லாம் போதாது என்று சர்வதேச அளவில் இந்தியாவில் தேர்தல்கள் நியாயமாக நடக்குமா எனும் விமர்சனங்கள் எழுந்து புதிய நெருக்கடி ஏற்பட்டது.
நிலைமை மோசமாவதை உணர்ந்த பாஜக தலைமை கூட்டணி பேச்சு வார்த்தையை வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் மீண்டும் ஆரம்பித்தது. அண்ணா திமுகவின் ஒப்புதலுக்காக கடைசி நாள் வரை முயற்சி செய்தார்கள். தங்களது உடைப்பு வேலையை மீண்டும் ஆரம்பித்தது பாரதிய ஜனதா. காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்படும் நிலையிலிருந்த மல்யுத்த வீரர் விஜேந்திர சிங்கை தம் கட்சிக்கு இழுத்தது பாஜக. ஆம் ஆத்மி அமைச்சர் ஒருவரை ராஜினாமா செய்ய வைத்தார்கள். ராமர் கோயில் மட்டும் போதும் என நம்பிக் கொண்டிருந்த பாஜக இப்போது தேர்தல் வாக்குறுதியை மெனக்கட்டு எழுத வேண்டிய நிலைமைக்கு வந்திருக்கிறது. இப்போதெல்லாம் எந்த விவாதத்திலும் 400 சீட்டுகளை பாஜக வெல்லும் என்று பாஜகவினர் யாரும் பேசுவதில்லை என்ற விமர்சனத்தையும் விமர்சகர்கள் முன்வைக்கின்றனர்.
யார் வெல்வது தோற்பது என்பதல்ல விஷயம். தேர்தல் வெறும் சடங்கு தான் எனும் நம்பிக்கையிலிருந்து இரண்டு தரப்பும் வெற்றிக்கு போராடும் நிலை உருவாகி இருப்பதே ஜனநாயகம் பிழைப்பதற்கான குறைந்தபட்ச நம்பிக்கையாக இன்று இருக்கிறது. ஒற்றை நபரிடம் அதிகாரம் குவிந்து கிடப்பதன் கேடு வரலாறு துவங்கிய காலத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
குறைந்தபட்ச வரலாற்று அறிவு இருப்பவர்கள் கூட ஒற்றை நபர் சர்வாதிகாரத்தின் தீமைகளை உணர்ந்து இருப்பார்கள். அத்தகைய சூழல் உருவாகாமல் இருப்பதற்கு நாட்டில் ஜனநாயகம் பிழைத்திருப்பது முக்கியம். அந்த வகையில் இந்தியா இரண்டு மாதங்களில் குறிப்பிடத்தக்க அளவுக்கு தனது அவநம்பிக்கை சூழலில் இருந்து மீண்டு இருக்கிறது. அதற்கான உறுதியான நம்பிக்கை தமிழகத்திலிருந்து சென்று இருக்கிறது எனும் வகையில் பெருமிதம் கொள்ளலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க, காங்கிரஸ் கூட்டணி அதற்கு ஒரு வலுவான காரணியாக இருந்தது என்பதையும் மறுக்க முடியாது.