கனிமொழி எம்பியின் காரை வழிமறித்து சோதனையிட்ட பறக்கும் படையினர் - நெல்லையில் பரபரப்பு
கனிமொழியின் காரை வழிமறித்த தேர்தல் பறக்கும் படையினர், காரை முழுவதும் சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சோதனைக்கு கட்டுப்பட்டு காரை விட்டு இறங்கி நின்றார் கனிமொழி.
நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராபர்ட் புரூஸை ஆதரித்து, திமுக எம்பி கனிமொழி கருணாநிதி இன்று நெல்லை பாளையங்கோட்டை பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக இன்று காலை பாளையங்கோட்டை காய்கறி சந்தை மற்றும் மர வியாபாரிகள் சங்க நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டார். அதனை தொடர்ந்து தட்சிணாமாற நாடார் சங்க நிர்வாகிகளையும் சந்தித்து காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து திமுக மத்திய மாவட்ட அலுவலகத்திற்கு சென்றார். அவருடன் காரில் பின்னால் அமைச்சர் தங்கம் தென்னரசு அமர்ந்திருந்தார்.
இந்த நிலையில் செல்லும் வழியில் கனிமொழியின் காரை வழிமறித்த தேர்தல் பறக்கும் படையினர், காரை முழுவதும் சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சோதனைக்கு கட்டுப்பட்டு காரை விட்டு இறங்கி நின்றார் கனிமொழி. அதே நேரம் காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த அமைச்சர் தங்கம் தென்னரசும் சோதனைக்குட்பட்டு காரை விட்டு கீழே இறங்கி நின்றார். தொடரந்து கனிமொழியை வரவேற்கும் விதமாகம் செல்லும் இடங்களில் அவருக்கு மரியாதையளிக்கும் விதமாக அவருக்கு சால்வைகள் பரிசு பொருட்கள் வழங்குவது வழக்கம். அது மட்டுமே காரில் இருந்த நிலையில் காரில் இருந்த சால்வைகள் மற்றும் பரிசு பொருட்களை முழுவதையும் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அது தவிர சோதனையில் எதுவும் இல்லாத நிலையில் பறக்கும் படையினர் சோதனையை முடித்துக்கொண்டனர். மேலும் சோதனைக்கு எந்த எதிர்ப்பும் காட்டாமல் கனிமொழியும், அமைச்சர் தங்கம் தென்னரசுவும் தொடர்ந்து காரில் ஏறி புறப்பட்டு சென்றனர். பரப்புரைக்கு வந்த இடத்தில் கனிமொழியின் காரை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.