Lok Sabha Election 2024: அமித்ஷா வந்த வாகன பேரணி இறுதி ஊர்வலம் போல் இருந்தது - சி.வி.சண்முகம்
CV Shanmugam : வன்னிய சமுதாயத்தை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அன்புமணிக்கு அதிமுகவை பற்றி பேச எந்த தகுதியும் கிடையாது - சி.வி.சண்முகம்
விழுப்புரம்: வன்னிய சமுதாயத்தை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அன்புமணிக்கு அதிமுகவை பற்றி பேச எந்த தகுதியும் கிடையாது என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் திண்டிவனம் பிரச்சாரத்தில் ஆவேசமாக பேசினார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அதிமுக வேட்பாளர் பாக்யராஜை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், “அதிமுகவை எங்கு பார்த்தாலும் துரோகம் செய்துவிட்டதாக விமர்சிக்கிறார்.
அன்புமணி அன்று என் வீட்டிற்கு இட ஒதுக்கீட்டிற்காக வந்தவர். இன்று வழக்கிற்காக பாஜகவிற்கு பயந்து எங்களை விமர்சிக்கிறார். நன்றி கெட்டவர் என்பதற்கு உதாரணம் அன்புமணி. வன்னிய மக்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துகிற குடும்பம் அன்புமணி குடும்பம். 2006லேயே உங்களை பார்த்தவன் இந்த சண்முகம். நீங்கள் கொலைகார குடும்பம், நன்றி கெட்ட குடும்பம்” என்று முன்னாள் அமைச்சர் சி.வி விசண்முகம் விமர்சித்தார். தற்பொழுது மக்களை விரோத கட்சிகள் தான் மத்திய ஆளும் மோடி அரசு. மாநிலத்தில் ஆளும் மு.க ஸ்டாலின் அரசு. மக்களைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல் உள்ள அரசுகள்தான் மத்திய அரசு மாநில அரசு என குற்றம் சாட்டினார்.
மேலும், “தமிழகத்தில் நடந்து வரும் திமுக அரசு தன் குடும்பம் உதயநிதி, மருமகன் சபரீசன், தங்கை கனிமொழி நாட்டைப் பற்றி நாட்டு மக்களைப் பற்றி சிந்திக்காமல் அரிசி, பால், மின்சார கட்டணம் உயர்வு சொத்து வரி உயர்வு, பத்திரப்பதிவு, வீட்டு வரி, வாடகை உயர்வு, குடிநீர் உயர்வு உள்ளிட்ட அனைத்து விலைவாசிகளும் உயர்த்தி உள்ள அரசு திமுக அரசு.
பொய்யான தகவல்களை சொல்லி ஆட்சி நடத்துபவர்கள் தான் மு.க.ஸ்டாலின் மத்திய ஆளும் மோடி அரசு, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உள்ளது. எதில் என்றால் போதை விற்பனையில் உள்ளது. பாஜக ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற குஜராத் மாநிலத்தில் இருந்து தான் கஞ்சா தமிழ்நாட்டிற்கு வருகிறது.
தன் மீது போடப்பட்ட வழக்கை சட்ட ரீதியாக சந்திக்காமல் பாஜக காலில் விழுந்தவர் தான் அன்புமணி. இந்த சி.வி.சண்முகம் அப்படி அல்ல, திமுக அரசால் என் மேல் 23 வழக்குகள் போடப்பட்டுள்ளன. அதனால் இவரை போல பயந்து கொண்டு மற்றவர் காலில் விழுந்தவன் நான் அல்ல. நான் சட்ட ரீதியாக சந்தித்து வருகிறேன். பாஜக ஆட்சிக்கு வந்ததால் விமான நிலையம், ரயில் நிலையம், மின்சாரத்துறை அதானிக்கும் அம்பானிக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டை கூறு போட்டு விற்று விடுவார்கள், தமிழ்நாட்டில் மது விற்பனை செய்வது மு.க.ஸ்டாலின் குடும்பம் அதற்கு தண்ணீர் விற்பதும் மு.க.ஸ்டாலின் குடும்பம்தான். இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென்றால் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.
அண்ணாமலை மத்திய ஆட்சியில் இருந்தால்தான் தைரியமாக பேச முடியும். ஆனால் நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் பேசுவோம் இல்லாவிட்டாலும் பேசுவோம். அதை நினைவில் கொள்ள வேண்டும் அண்ணாமலை” என எச்சரித்தார் சிவிசண்முகம்.
தொடர்ந்து, “அண்ணாமலை அவர்களே நாவடக்கம் வேண்டும் அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் எல்லாம் அழிந்து போய் உள்ளார்கள். அதிமுக இயக்கம் என்பது இதுவரை உள்ளது. ஆனால் எதிரியாக இருந்தாலும் இருந்தாலும் துரோகியாக இருந்தாலும் அதிமுக அழிக்கநினைத்தால் அவர்கள் அழிந்து விடுவார்கள்” என்றார்.
அண்ணாமலைக்கு ஒன்று நினைவுபடுத்த விரும்புகிறேன். புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருந்த உங்களுடைய தலைவர் வாஜ்பாய் அரசை வீட்டுக்கு அனுப்பியது அதிமுக அரசு என மீண்டும் ஒருமுறை எச்சரித்தார். பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா வந்த வாகனம் பேரணி இறுதி ஊர்வலம் போல் இருந்தது. ஆகையால் பாஜக கட்சிக்கு இந்த பேரணி இறுதி யாத்திரை அண்ணாமலைக்கு இது கடைசி தேர்தல் பிரச்சாரம் என பகிரங்கமாக விமர்சனம் செய்தார்.