Lok Sabha Election 2024: ஒரேகட்டமாக தேர்தலை நடத்த அரசியல் கட்சிகள் வலியுறுத்தல் - தலைமை தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார்
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

வரும் மக்களவைத் தேர்தலையொட்டி கடந்த இரண்டு தினங்களாக சென்னையில் ஆய்வு செய்து வந்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் இன்று அதாவது பிப்ரவரி 24ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது, “ பணப்பட்டுவாடாவை தடுக்க அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மக்களவைத் தேர்தலுக்காக ஒரு கட்சி இப்போதே பணப்பட்டுவாடா செய்துவிட்டதாக ஒரு புகார் வந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 6.19 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3.04 கோடி வாக்காளர்களும், 3.14 கோடி பெண் வாக்காளர்களும், 8,294 பேர் மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். மொத்த வாக்காளர்களில் 22 முதல் 29 வயது வரை உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை மட்டும் 1.08 கோடி. தமிழ்நாட்டில் முதல் முறை வாக்காளர்கள் இந்த தேர்தலில், 5.26 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழ் நாட்டில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த அரசியல் கட்சிகள் கோரிகை விடுத்துள்ளனர். மாநிலம் முழுவதும் மொத்தம் 68 ஆயிரத்து 144 வாக்குச் சாவடிகள் உள்ளன. நகரப் பகுதிகளில் 27 ஆயிரத்து 306 வாக்குச் சாவடிகளும், கிராமப் பகுதிகளில் 40 ஆயிரத்து 838 வாக்குச்சாவடிகள் உள்ளன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சி - விஜில் செயலியில் பொதுமக்கள் தங்களது புகாரைத் தெரிவிக்கலாம், புகார் தெரிவிக்கப்பட்ட 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலின்போது பண விநியோகத்தையும் மது விநியோகத்தையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். பதற்றமான வாக்குச் சாவடிகளில் சிசிடிவி கேமரா பொறுத்தப்பட்டு, சி.ஆர்.எஃப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபத்தப்படுவார்கள். வோட்டர் ஹெல்ப்லைன் செயலி மூலம் வாக்காளர்கள் வாக்குச் சாவடி குறித்து தெரிந்து கொள்ளலாம். கே.ஒய்.சி செயலி மூலம் வாக்காளர்கள் தங்களது தொகுதியின் வேட்பாளர்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம். தேர்தல் பிரச்சாரம் பல்வேறு அனுமதிகள் அளிப்பது தொடர்பாக சமமான வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என கோரிக்கை வந்துள்ளது.
இணைய வழியே பணப்பரிமாற்றம் நடப்பதையும் மிகவும் தீவிரமாக கண்காணித்து வருகின்றோம். இணைய வழி பணப்பட்டுவாடாவைத் தடுக்க தேசிய பணப் பரிவர்த்தனைக் கழகம் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும். அங்கீகாரம் இல்லாத கட்சிகளின் சின்னங்கள் மாற்றத்திற்குரியதே. தேர்தலுக்கு 7 நாட்களுக்கு முன்னர் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கப்படும். தேர்தல் சுதந்திரமாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் நடத்துவதில் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது. தேர்தல் நடைபெறும்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் வாக்காளர்களுக்கு உதவும் வகையிலும் முன் ஏற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளன.” என பேசினார்.





















