Nainar Nagendren: நயினார் நாகேந்திரன் மீதான தொடர் புகார்களும் வழக்குப்பதிவும் - நடந்தது என்ன?
2 நாட்களுக்கு முன்பும் டி-ஷர்ட், தொப்பி, பேனா, சேலை போன்றவை நயினார் நாகேந்திரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் தொண்டர்களுக்கு வினியோகிக்க வைத்திருந்ததாக கூறப்பட்டது.
நெல்லை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். இந்த நிலையில் இவர் நெல்லை தொகுதியில் பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக நேற்று ராதாபுரம் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். அப்போது இரவு 10 மணிக்கு மேல் கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம், இருக்கன் துறை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாக புகார் சென்றுள்ளது. அதன் அடிப்படையில் பறக்கும் படை அதிகாரி தினேஷ்குமார் பழவூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததாக நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 25 பேர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறி பரப்புரையில் ஈடுபட்டதாக நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே நயினார் நாகேந்திரன் மீது தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஆதரவாளரிடமிருந்து சென்னையில் 4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து நயினார் நாகேந்திரன், அது என்னுடைய பணமில்லை, யாருடைய வேலை என்று தெரியவில்லை. இந்த காலத்தில் யாரையும் நம்ப முடியவில்லை, எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கவே இது போன்று புகார் வந்துள்ளது என ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருந்தார். இந்த நிலையில் தொடர்ந்து நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கமான நபரான கணேஷ் மணி என்பவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 2 லட்சம் ரூபாய் ரொக்க பணம், வேஷ்டி, பரிசு பொருட்கள் ஆகியவற்றை பறக்கும் படையினர் நேற்று பறிமுதல் செய்துள்ளனர். அதே போல 2 நாட்களுக்கு முன்பும் டி-ஷர்ட், தொப்பி, பேனா, சேலை போன்றவை நயினார் நாகேந்திரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் தொண்டர்களுக்கு வினியோகிக்க வைத்திருந்ததாக கூறப்பட்டது. இது போன்று பல்வேறு புகார்கள் அவர் மீது தொடர்ச்சியாக எழுந்து வரும் நிலையில் தற்போது 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே நயினார் நாகேந்திரன் சட்டமன்ற அலுவலகத்திற்கான போர்டை தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில் மறைக்காமல் வைத்திருந்ததாகவும், தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில் அதில் உங்கள் வீட்டுப் பிள்ளை என்ற வாசகம் இடம் பெற்றிருந்ததாகவும், பாரதிய ஜனதா கட்சியின் சின்னமான தாமரை இடம் பெற்றிருந்ததாலும் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக சந்திப்பு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திறந்த வெளி அழகை சீர்குலைத்ததாக பிரிவு நான்கின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குறிப்பாக தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இவரது சட்டமன்ற அலுவலக பணியாளர் முருகன் மீது நெல்லை பாரளுமன்ற தொகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் வழக்காக பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது.