உள்ளாட்சித் தேர்தல்: தென்காசி மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 24.73% வாக்குகள் பதிவு
’’தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கீழப்பாவூர், கடையம், மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய ஒன்றியங்களில் முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல்’’
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்த 9 மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய நான்கு பதவிகளுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில் தென்காசி மாவட்டத்தை பொருத்த வரையில் 06.10.2021 தேதி ஆலங்குளம், கீழப்பாவூர், கடையம், மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய ஒன்றியங்களுக்கு முதல் கட்டமாகவும், 09.10.2021 அன்று தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில், குருவிகுளம் ஆகிய ஒன்றியங்களுக்கு இரண்டாம் கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
தென்காசியில் உள்ள 2284 உள்ளாட்சி பதவிகளுக்கு 7832 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வேட்புமனுக்களில் 147 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன, 903 வேட்பு மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன, 406 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வானார்கள். மீதமுள்ள 6376 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தென்காசி மாவட்டத்தில் அக்டோபர் 6ஆம் தேதியான இன்று ஆலங்குளம், கீழப்பாவூர், கடையம், மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய ஒன்றியங்களுக்கு மட்டும் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. இதில் 8 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 39 பேர் போட்டியிடுகின்றனர், 84 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் 349 பேர் போட்டியிடுகின்றனர், 118 கிராம ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு 553 பேர் போட்டியிடுகின்றனர், 1056 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 2593 பேர் போட்டியிடுகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கீழப்பாவூர், கடையம், மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய ஒன்றியங்களுக்கு மட்டும் நடைபெறும் முதற்கட்ட வாக்குப் பதிவில் 754 வாக்குச் சாவடிகள் உள்ளன. வாக்காளர்களின் எண்ணிக்கையை பொருத்தவரையில் 211411 ஆண் வாக்காளர்கள், 222622 பெண் வாக்காளர்கள், 17 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 434050 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இந்த முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு 6008 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். 357 பதற்றமான வாக்கு சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது. 57 வாக்கு சாவடிகளில் வெப் ஸ்டிரீமிங் மூலம் கண்காணிப்பும், 50 வாக்கு சாவடிகளில் நுண்பார்வையாளர்களும் காண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளனர். 697 வாக்கு சாவடிகள் சி.சி.டி.வி கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.
காலை 7 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவில் ஏராளமான வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
காலை 11 மணி நிலவரப்படி பதிவான வாக்குகளின் விபரம்
ஆலங்குளம் : 26.70% (30419)
கடையம் : 23.84% (20324)
கீழப்பாவூர் : 24.26% (26589)
மேலநீலிதநல்லூர் : 25.94% (16258)
வாசுதேவநல்லூர் : 22.01 % (13767)
மொத்தம் ஐந்து ஒன்றியங்களில் பதிவான வாக்கு விகிதம் : 24.73% (1,07,357)