Local Body Election: தூத்துக்குடி மாநகராட்சியில் 48 வார்டுகளில் திமுக, அதிமுக நேரடி மோதல் - மேயர் ரேசில் கீதாஜீவன் சகோதரர்
’’அமைச்சர் கீதாஜீவனின் சகோதரர் என்.பி.ஜெகன் மேயராக தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதனின் மகன் எஸ்.பி.எஸ் ராஜா போட்டி’’
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 18 பேரூராட்சிகளில் உள்ள வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. மாநகராட்சியில் 60 வார்டு உறுப்பினர்களும், நகராட்சியில் 81 வார்டு உறுப்பினர்களும், பேரூராட்சியில் 273 வார்டு உறுப்பினர்களும் ஆக மொத்தம் 414 வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சியில் 3 லட்சத்து 22 ஆயிரத்து 388 வாக்காளர்களும், நகராட்சிகளில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 363 வாக்காளர்களும், பேரூராட்சிகளில் 1 லட்சத்து 78 ஆயிரத்து 484 வாக்காளர்களும் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 3 லட்சத்து 14 ஆயிரத்து 207 ஆண் வாக்காளர்களும், 3 லட்சத்து 28 ஆயிரத்து 934 பெண் வாக்காளர்களும், 94 திருநங்கைகளும் ஆக மொத்தம் 6 லட்சத்து 43 ஆயிரத்து 235 பேர் வாக்களிக்க உள்ளனர்.
இதற்காக மாவட்டத்தில் 762 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவதற்காக சுமார் 7 ஆயிரத்து 200 பணியாளர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு உள்ளன.மேலும் வாக்குப்பதிவு எந்திரங்களும் முதல் பரிசோதனைகள் முடிக்கப்பட்டு 922 வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த எந்திரங்கள் சுழற்சி முறையில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்து வைக்கப்பட்டு உள்ளன.
தூத்துக்குடி மாநகராட்சி 2008 ஆகஸ்டு 5 ஆம் தேதி அன்றைய முதல்வர் கருணாநிதியால் துவக்கி வைக்கப்பட்டது. முதல் மேயராக தூத்துக்குடி நகரசபை தலைவராக இருந்த கஸ்தூரி தங்கம் நியமன மேயராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 2011ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அதிமுகவின் சசிகலா புஷ்பா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து அவர் அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து மேயருக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுகவின் அந்தோணி கிரேசி தேர்வு செய்யப்பட்டார். தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் 60 வார்டுகளில் 48 வார்டுகளில் திமுகவும் அதிமுகவும் போட்டியிடுகிறது
திமுக சார்பில் 20 வது வார்டில் போட்டியிடும் அமைச்சர் கீதாஜீவனின் சகோதரர் என்.பி.ஜெகன் மேயராக தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அதிமுக சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி சண்முகநாதனின் மகன் எஸ்.பி.எஸ் ராஜா 59 ஆவது வார்டில் போட்டியிடுகிறார். இவர் அதிமுகவின் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியை பொறுத்தவரை 60 வார்டுகளில் திமுகவும் அதிமுகவும் 48 வார்டில் நேரடியாக மோதுகிறது. இதில் அதிமுகவின் முன்னாள் கவுன்சிலர்கள் அல்லது அவர்களின் உறவினர்கள் 19 பேருக்கு மீண்டும் சீட் கொடுக்கப்பட்டு உள்ளது. திமுகவில் முன்னாள் கவுன்சிலர்கள் அல்லது அவர்களின் உறவினர்கள் 15 பேருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது.