Rajasthan Byelection Result: ராஜஸ்தான் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்ற காங்கிரஸ்! வீணாய் போன பாஜக கணக்கு!
Rajasthan Byelection Result: ராஜஸ்தானின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸின் இந்த வெற்றியால் சட்டமன்றத்தில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 70ஆக உயர்ந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் உள்ள கரன்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இங்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் அமைச்சராக இருந்த பாஜக வேட்பாளர் சுரேந்திர பால் சிங் தோல்வியடைந்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் 200 தொகுதிகளில் ஒரு வேட்பாளர் உயிரிழந்த காரணத்தால் 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதற்கான தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்தல் முடிவுகளில் பாஜக 115 தொகுதிகளில் வெற்றிப்பெற்றது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் வெறும் 69 இடங்கள் மட்டுமே கைப்பற்றியது. இதனையடுத்து, ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டார். துணை முதல்வர்களாக தியா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைரவா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னாள் அமைச்சர் வாசுதேவ் தேவ்நானி சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இடைத்தேர்தல்
ராஜஸ்தான் மாநிலத்தின் சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது, காங்கிரஸ் வேட்பாளரான குர்மீத் சிங் கூனார் மரணமடைந்ததை அடுத்து கரன்பூர் தொகுதிக்கான தேர்தல் மட்டும் ஒத்திவைக்கப்பட்டது. மறைந்த குர்மீத் சிங் கூனாருக்குப் பதிலாக அவரது மகன் ரூபிந்தர் சிங்கை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக களமிறக்கியது. சுரேந்திர பால் சிங் இதற்கு முன்பும் மாநில அமைச்சராக இருந்துள்ளார். அதேநேரத்தில் இம்முறை அவர் முதலமைச்சர் பஜன்லால் சர்மா தலைமையிலான அமைச்சரவையில் கடந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி மாநில அமைச்சராக (சுயேச்சைப் பொறுப்பு) பதவியேற்றார். இதற்கு எதிர்க்கட்சியான காங்கிரஸால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி 5ஆம் தேதி கரன்பூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதியில் மொத்தம் 81.38 % சதவீதம் வாக்கு பதிவானது. இந்நிலையில் இந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று அதாவது ஜனவரி 8ஆம் தேதி காலையிலேயே தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிந்தபோது காங்கிரஸ் வேட்பாளர் ரூபிந்தர் சிங் கூனர் 12 ஆயிரத்து 570 வாக்குகள் வித்தியாசத்தில் சுரேந்திர பால் டிடியை தோற்கடித்துள்ளார். இது ஆளும் பாஜக அரசுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகின்றது. சுரேந்திர பால் டிடியை அமைச்சராக்கினால் மக்கள் கட்டாயம் அவருக்குத்தான் வாக்களிப்பார்கள் என அரசியல் கணக்கு போட்ட பாஜவின் தேர்தல் யுக்தி தோல்வியில் முடிந்துள்ளது. டிசம்பர் 30ஆம் தேதி அமைச்சராக பொறுப்பேற்ற சுரேந்திர பால் டிடி தற்போது பதவி விலகவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளார்.
ராஜஸ்தானின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸின் இந்த வெற்றியால் சட்டமன்றத்தில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 70ஆக உயர்ந்துள்ளது.