உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தஞ்சாவூரில் வாக்கு பதிவு இயந்திரம் செயல் முறை விளக்க பயிற்சி
வாக்காளர்கள் கொண்டு வரும் சீட்டிலுள்ள எண், பெயர், முகவரி சரியாக உள்ளதா என சரிப்பார்த்து, விரலில் மை வைக்க வேண்டும் பயிற்சிஅளிக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
தஞ்சை மாநகராட்சி தேர்தலில் ஈடுபடும் வாக்குப் பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் வாக்கு பதிவு இயந்திரம் குறித்த செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. தஞ்சை மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் கடந்த 28.12022 அன்று தொடங்கி வரும் 4.2.2022 வரை நடைபெறும். அதைத் தொடர்ந்து 5.2.2022 அன்று வேட்புமனுக்கள் ஆய்வு செய்யப்படுகிறது. வரும் 7.2.2022 அன்று வேட்புமனுக்களை திரும்ப பெறுதலும், அதைத் தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19.2.2022 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. பின்னர், 22.2.2022 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தஞ்சை மாநகராட்சியிலுள்ள 51 வார்டு கவுன்சிலர் பதவி இடங்களுக்கு, 94,517 ஆண்களும், 1,04,062 பெண்களும், 18 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 1,98,597 வாக்காளர்களும், வாக்களிக்க வசதியாகத் தஞ்சாவூர் மாநகரில் 196 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தேர்தல் பணியில் ஈடுபடுவதற்காக தஞ்சை மாநகராட்சியின் 15 மண்டலமாக பிரிக்கப்பட்டு வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தஞ்சை மாநகராட்சி பகுதியில் மட்டும் 700-க்கும் மேற்பட்ட தேர்தல் அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்தத் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குப் பதிவு அலுவலர்களுக்கு மூன்று கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி முதல் கட்ட பயிற்சி நேற்று தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் வாக்கு பதிவு அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு எந்திரம் குறித்த செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் ஏதேனும் சந்தேகம் வந்தாலோ அல்லது வேறு கோளாறு ஏற்பட்டால், உடனடியாக வாக்கு சாவடி தலைமை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் முடிவு செய்வார். வாக்காளர்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும், அதற்கு முன்னதாக வாக்காளர்கள் கொண்டு வரும் சீட்டிலுள்ள எண், பெயர், முகவரி சரியாக உள்ளதா என சரிப்பார்த்து, விரலில் மை வைக்க வேண்டும் பயிற்சிஅளிக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வீடியோ படக்காட்சி மூலம் வாக்குப்பதிவு விதிமுறைகள் குறித்தும் விளக்கி கூறப்பட்டது. அதன் பின்னர் வாக்குப்பதிவு அலுவலர்கள் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சி வகுப்பை தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தொடங்கி வைத்து பேசினார். இதில் மாநகராட்சி மாநகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம், மேலாளர் கிளமெண்ட், கல்லூரி முதல்வர் சிந்தியா செல்வி, உதவி பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து 2-வது கட்ட பயிற்சி முகாம் வருகிற 9ஆம் தேதி நடைபெறுகிறது.