பூம்புகாரில் தேர்தல் விழிப்புணர்வு: ஆள் நடமாட்டமில்லா கடலில் படகு பயணம்! அதிகாரிகள் செயல்பாடு குறித்து பொதுமக்கள் கேள்வி?
பூம்புகார் சுற்றுலா வளாகம் மற்றும் மீன்பிடித் துறைமுகத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் பார்வையாளர்களின் விழிப்புணர்வு நிகழ்வு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போர்க்கால அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சீர்காழி வட்டம் பூம்புகார் சுற்றுலா வளாகம் மற்றும் துறைமுகப் பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
முக்கிய அதிகாரிகள் பங்கேற்பு
பூம்புகார் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் சஞ்சய்குமார் சிங் யாதவ், தேர்தல் காவல்துறை பார்வையாளர் பாஸ்கர் முகர்ஜி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரும் மாவட்டத் தேர்தல் அலுவலருமான ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின் ஆகியோர் இந்த நிகழ்ச்சிகளில் நேரடியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கலைநிகழ்ச்சிகள் மற்றும் கையெழுத்து இயக்கம்
பூம்புகார் சுற்றுலா வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வாக்காளர்களைக் கவரும் வகையில் நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து, "எனது வாக்கு விற்பனைக்கல்ல" மற்றும் "ஜனநாயகக் கடமையை ஆற்றுவோம்" என்ற வாசகங்கள் அடங்கிய கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் தொடங்கி வைத்தனர்.
சுற்றுலாப் பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, பூம்புகார் சுற்றுலாத் தலத்திற்கான அனுமதிச் சீட்டுகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களை அச்சிட்டு வெளியிட்டனர். மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த தேர்தல் விழிப்புணர்வு இலச்சினை (Logo) முன்பு அதிகாரிகள் செல்ஃபி எடுத்துக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
துறைமுகத்தில் உறுதிமொழி
இதனைத் தொடர்ந்து பூம்புகார் மீன்பிடித் துறைமுகத்தில் மீனவ வாக்காளர்களுக்கான சிறப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் மற்றும் மீன்பிடித் தொழில் சார்ந்த தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். "வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் எவ்விதத் தூண்டுதலுமின்றி நேர்மையாக வாக்களிப்போம்" என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
கடலுக்குள் சென்று விழிப்புணர்வு
நிகழ்ச்சியின் ஒரு முக்கியப் பகுதியாக, பூம்புகார் மீன்பிடி துறைமுகப்பகுதியில் கடற்கரையிலிருந்து தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் விசைப்படகில் கடலுக்குள் சென்றனர். கையில் தேர்தல் விழிப்புணர்வு பேனர்களை ஏந்தி, கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களுக்கும், கடற்கரை ஓரங்களில் உள்ளவர்களுக்கும் வாக்களிப்பதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர்.
பொதுமக்களின் கேள்வியும் விமர்சனமும்
இந்த விழிப்புணர்வுப் பயணம் ஒருபுறம் பாராட்டுகளைப் பெற்றாலும், மறுபுறம் சில விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது. ஆள் நடமாட்டமே இல்லாத கடலை நோக்கி அதிகாரிகள் படகில் சென்று விழிப்புணர்வு செய்தது சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.
இது குறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில்: "விழிப்புணர்வு என்பது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் செய்யப்பட வேண்டிய ஒன்று. பூம்புகார் கடற்கரை மற்றும் துறைமுகப் பகுதிகளில் விழிப்புணர்வு செய்ததில் அர்த்தமுண்டு. ஆனால், மக்கள் நடமாட்டமே இல்லாத, வெறும் கடல் நீர் மட்டுமே இருக்கும் பகுதிக்கு அதிகாரிகள் படகில் சென்று பதாகைகளை ஏந்துவது யாருக்காக? இது வெறும் புகைப்பட விளம்பரத்திற்காகச் செய்யப்பட்டதா?" என கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், அரசு இயந்திரத்தின் நேரம் மற்றும் எரிபொருள் செலவிடப்படும் இத்தகைய நடவடிக்கைகள், உண்மையில் வாக்காளர்களைச் சென்றடையும் வகையில் திட்டமிடப்பட வேண்டும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பங்கேற்ற அலுவலர்கள்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். பூங்கொடி, மகளிர் திட்ட அலுவலர் சீனிவாசன், மாவட்ட சுற்றுலா அலுவலர் முத்துசாமி, சீர்காழி மற்றும் பூம்புகார் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மீன்வளத்துறை அதிகாரிகள், வட்டாட்சியர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எனப் பெரும் திரளான அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தேர்தல் ஆணையத்தின் இத்தகைய தீவிர முயற்சிகள், வரும் ஏப்ரல் 23 அன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.





















