துரோகத்தின் மறுபெயர் எடப்பாடி பழனிசாமி! - கனிமொழி எம்.பி அதிரடிப் பேச்சு
தமிழ்நாட்டு பிள்ளைகள் படித்து டாக்டராக ஆகக்கூடாது என்பதற்காக நீட் தேர்வை கொண்டு வந்துள்ளனர்!

திருநெல்வேலி: தமிழ்நாட்டு பிள்ளைகள் படித்து டாக்டராக ஆகக்கூடாது என்பதற்காக நீட் தேர்வை கொண்டு வந்துள்ளனர். தேசிய புதிய கல்விக் கொள்கையையும் பாஜக கொண்டு வருகிறது: திருநெல்வேலி தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி. பேச்சு.
திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுப்பிரமணியனை ஆதரித்து, திருநெல்வேலி கங்கைகொண்டான் பஜார் பகுதியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு, பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி.; திருநெல்வேலி தொகுதிக்கு நம்முடைய முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்கள் தேர்ந்தெடுத்து உங்கள் கைகளிலே ஒப்படைத்திருக்கக்கூடிய வேட்பாளர் சுப்பிரமணியம் அவர்களுக்கு மிகச் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். அதே ஆர்வத்தோடு உங்களது பணிகளைத் தொடர வேண்டும். மிகபெரிய வெற்றியை வெற்றியை நம்முடைய முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலே வாக்களித்து பெற்றுத் தர வேண்டும் என்று உங்களையெல்லாம் வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்.
இங்கே இருக்கக்கூடிய அத்தனைபேருக்கும் நன்றாகத் தெரியும். நான் மக்களைச் சந்தித்து வாக்குக் கேட்கும்போது, நம்முடைய முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்களின் பெயரால் வாக்குக் கேட்கும்போது, மக்களுக்கு தந்திருக்கக்கூடிய வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றித் தந்திருக்கிறோம் என்ற அந்த பெருமையோடு, அந்த மகிழ்ச்சியோடு, அந்த உரிமையோடு உங்களிடம் ஓட்டுக் கேட்கிறோம்.
இங்கு இருக்கக்கூடிய சகோதரிகள் எல்லாம் மகிழ்ச்சியோடு கலந்துகொண்டிருக்கிறார்கள் என்றால், நம்முடைய முதலமைச்சர் தந்த வாக்குறுதி. மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் என்ற அந்த வாக்குறுதியை நிறைவேற்றித் தந்திருக்கிறார்கள் என்ற மகிழ்வோடு இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டிருக்கிறார்கள்.
வரக்கூடிய திராவிட மாடலின் 2.0 ஆட்சியிலே அந்த ஆயிரம் ரூபாய் என்பது இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்ற அந்த நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறது. அந்த உறுதியோடு இந்த நிகழ்ச்சியிலே கலந்துகொண்டிருக்கிறீர்கள்.
நம்முடைய முதலமைச்சர் அவர்கள் 8ஆயிரம் ரூபாய்க்கான கூப்பனை வழங்குகிறார். நாங்க உங்களுக்கு இதை வாங்கித்தர்றோம், அதை வாங்கித்தர்றோம் சொல்லல. உங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்கக்கூடிய கடைக்கு போய் உங்களுக்கு என்ன வேணுமோ அதை வாங்கிக்கோங்க என்று சொல்லி நம்முடைய முதலமைச்சர் 8ஆயிரம் ரூபாய்க்கான கூப்பனை, நாம் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு மாதத்திற்குள் நம்ம ஆட்சி வந்துவிடும். வந்தவுடன் அதை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றித் தருவார்கள்.
இப்படி கலைஞர்கள் அவர்கள் எப்படி மக்களுக்கு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றித் தந்தார்களோ, வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டி தர்றேன்னு சொன்னாங்க தந்தாங்க. விவசாயிகளுக்கு கட்டணமில்லா மின்சாரத்தை தந்து விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்றிய தலைவர் கலைஞர் அவர்கள்.
இன்று நம்முடைய முதலமைச்சர், அவருடைய வழியிலே, 20 லட்சம் விவசாயிகளுக்கு மேல் பயன்பெறும் வகையில், கட்டணமில்லா இலவச புதிய மின்மோட்டார் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். இப்படி விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கிற ஆட்சி நம்முடைய திராவிட மாடல் ஆட்சி.
ஆனால், நமக்கு எதிராக நிற்கக்கூடிய அதிமுக யாரோடு கைகோர்த்துக் கொண்டிருக்கிறார்கள் பிஜேபியோட. 100 நாள் வேலைத்திட்டம். அதுல யாருக்கும் சம்பளமும் ஏறுவதில்லை. 100 நாள் வேலையும் இல்லை. அப்படி இருக்கக்கூடிய ஒரு ஆட்சி. மோடி ஆட்சிக்கு வந்தபிறகு நிதியைக் குறைத்துக் கொண்டே வருகிறார்கள். நிதியே கொடுப்பதில்லை. அந்தத் திட்டத்தையே நிறுத்திவிட வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள்தான் பிஜேபில இருக்காங்க. அவங்ககூட இருக்கறவங்களோடுதான் இன்று கூட்டணி வைத்திருகிறார் எடப்பாடி பழனிசாமி.
இப்படி, தமிழ்நாட்டிற்கு, மக்களுக்கு, சாதாரண சாமானிய மக்களுக்கு எதிராகவே செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய ஆட்சி ஒன்றியத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறக்கூடிய பிஜேபி. அத்தோடுதான் இணக்கமாக இருக்க வேண்டும். இணக்கமாக இருந்தால்தான் திட்டங்களைக் கொண்டுவர முடியும் அப்படின்னு எடப்பாடி பழனிசாமி சொல்றார்.
எல்லாவற்றுக்கும் இணக்கமாக இருந்தால் எப்படி? நமக்குன்னு உரிமை இல்லையா? அவங்க ஹிந்தி படி, ஹிந்த படின்னு.. சொல்லி பிள்ளைகள் படிப்பதற்கான காசை கொடுக்க மாட்டேங்கறாங்க.
ஹிந்தி படிச்சுட்டு என்ற பண்றது? அங்க இருந்துதான் இங்க வேலைக்கு வர்றாங்க. அவங்க தமிழ் படித்துவிட்டு வருவதில்லை. நம்ம பிள்ளைகள் பல நாடுகளுக்கும் வேலைக்குச் செல்கிறார்கள்.
நம்முடைய முதலமைச்சர் அவர்கள், எல்லாரும் படிக்க வேண்டும் என்பதற்காக, கல்லூரியில் படிக்கக்கூடிய நமது பிள்ளைகளுக்காக மாதம் ரூ.1000 கொடுக்கிறார். அடுத்து ஆட்சிக்கு வந்தவுடன் அந்தத்தொகை 1500ஆக உயர்த்தி வழங்கப்படும்.
படிச்சிட்டு வேலை தேடும் பிள்ளைகளுக்கு, அடுத்த ஆட்சிக்கு வந்தவுடனே, வேலை தேட 6 மாதம் ஆகும். வேலை தேடுவதற்கான பயிற்சி மற்றும் அந்த 6 மாதங்களுக்கு 1500 ரூபாய் தருகிறேன் என்று சொல்லக்கூடிய முதல்வர் நம்முடைய முதல்வர்.
இந்த பகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கு கல்விங்கறது ரொம்ப முக்கியமான விஷயம். இதுல மிகபெரிய அளவிலே முதலமைச்சர் கொண்டுவந்த நான் முதல்வன் திட்டம். அந்தத் திட்டத்தின்வழியாக, இங்க விக்கிமசிங்க புரத்தில இருக்ககூடிய மாணவர் சுப்பிரமணியபாரதின்னு அவர்களின் அம்மா அழகான பெயரை வைத்துள்ளார். அவரது அப்பா செங்கல்சூளையில் வேலைபார்ப்பவர். ரொம்ப கஷ்டப்பட குடும்பம். அவரின் அப்பாவுக்கு வருமானமே பெரிதாகக் கிடையாது.
நம்ம அரசுப் பள்ளியில்தான் படித்தார். தமிழ்வழிக்கல்வியில்தான் படித்தார். நம்ம முதலமைச்சர் கொண்டுவந்த நான் முதல்வன் திட்டத்தின் வழியாக, ஐஏஎஸ், ஐ.பி.எஸ், யுபிஎஸ்சி தேர்வெல்லாம் எழுதக்கூடிய வகையில், நமது அரசாங்கம் கொடுத்த பயிற்சியால், சாதாரண பிள்ளைகள் எல்லாம் ஐஏஎஸ்,ஐபிஎஸ்-ஆகப் போகவேண்டும் என்பதற்கான முதலமைச்சர் கொண்டுவந்த நான் முதல்வன் திட்டம் வழியாக பயிற்சிகள் வழங்கப்பட்டு, அதன்பிறகு அடுத்தகட்டப் பயிற்சிகாக சென்னையில் போய் இருந்த காலத்தில் மாதத்திற்கு ரூ.7500 தந்த முதலமைச்சர் நம்முடைய முதலமைச்சர் தளபதி அவர்கள்.
மாணவர் சுப்பிரமணியபாரதி ஒரு பேட்டியில் சொல்கிறார். என்னுடைய அப்பாவின் பல மாதங்கள் சம்பளம்கூட 7500 ரூபாய் இல்லை. ஆனால், எனது பயிற்சியின்போது மாதம் ரூ.7500 தந்தவர் முதலமைச்சர் என்றார்.
இன்றைக்கு அந்தத் தேர்வுகளை அவர் பாஸ் பண்ணிட்டு ஐஏஎஸ் ஆகப்போகிறார். இந்தப் பகுதியிலே செங்கல் சூளையிலே இருந்தவரின் மகன் சுப்பிரமணியபாரதி, இன்றைக்கு ஐஏஎஸ் அதிகாரியாக, இந்த ஊருக்கேகூட வரக்கூடிய வாய்ப்பை உருவாக்கித் தந்திருப்பது நம்முடைய ஆட்சி. நம்முடைய திராவிட மாடல் ஆட்சி.
ஆனா.. நம்ம பிள்ளைங்க படிக்கக்கூடாது. நம்ம பிள்ளைங்க படிச்சா டாக்டர் ஆயிடக் கூடாது. நீட் தேர்வைக் கொண்டுவருவாங்க. தேசிய புதிய கல்விக் கொள்கையைக் கொண்டுவரக்கூடியவர்கள். ஹிந்தி படிக்கலைன்னா நிதியைக் கொடுக்க மாட்டேன்னு சொல்லி 3600 கோடிக்கு மேல கல்விக்கான நிதியை நிறுத்தி வைத்துக்கொள்ள ஆட்சி பிஜேபி ஆட்சி. அவங்க எதிர்த்து ஒரு வார்த்தை கேள்வி கேட்காமல், அவர்களோடு கூட்டணி வைத்திருக்க்கூடியவர் எடப்பாடி பழனிசாமி.
இணக்கமாக இருந்தா திட்டம் கொண்டுவருவோம்னாரு. என்ன திட்டம் கொண்டுவந்தார்? தமிழ்நாட்டிற்கு எதிராக இருக்கக்கூடிய திட்டங்களைத் தான் கொண்டுவந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
அவருக்கு சொந்தமாக ஏதாவது திட்டம் கொண்டுவந்திருப்பார். அவரை வழக்கிலிருந்து காப்பாற்றிக்கொள்ள நிறைய திட்டங்களை கொண்டுவந்திருப்பார். அவர் எப்போதுமே ஒரு திட்டம் வைத்திருப்பார். யாராவது கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கறாங்க அப்படின்னு ஆரம்பிச்சாலே அவங்க பத்திரமாக இருக்கணும்.
ஏன்னா,, அம்மையார் சசிகலா காலில் விழுந்துதான் ஆசிர்வாதம் வாங்கினார். அவரே சொல்றார். பெரியவங்க காலில் விழுந்தால் என்ன என்று? விழுங்கள். ஆனால், விழுந்தவர்களின் காலை பத்திரமாக விடவேண்டுமல்லவா? அந்தக் கால் உங்களுக்கு ஆசிர்வாதம் கொடுத்ததோ, அந்தக் காலுக்கே இன்று அதிமுக அலுவலகத்தில் இடமில்லைன்னு சொல்லிங்டீங்கள்ள. அவங்களால உள்ள வர முடியல. அதிமுகவில் இடமில்லை. அவங்க காலையே வாரி விட்டிருக்கீங்க. கூடவே இருந்தவர் ஓபிஎஸ். ஜெயலலிதா உண்மையாகவே நம்பியது அவரைத்தான். அவங்க பதவியிறங்கிய போதெல்லாம் நம்பிக்கையாக அவரைத்தான் வைத்தார்கள். இன்று அவருக்கும் இடமில்லை.
அவரே.. தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டுமென்றால் அது தளபதியால்தான் முடியும் என்று சொல்லி இன்று நம்மோடு இணைந்திருக்கிறார்.
இப்படி, தன்னை காப்பாற்றியவர்கள், தன்னோடு இருந்தவர்கள் என அத்தனைபேருக்கும் துரோகம் செய்யக்கூடியவர்தான் எடப்பாடி பழனிசாமி. அவரைப்பற்றி கூட்டணியில் இருக்கக்கூடியவர்கள் எல்லாம் என்னென்னமோ பேசியிருக்காங்க. அவர்கூட இருக்கறதுக்கு தூக்குப்போட்டுக்கொள்ளலாம், அவரைப் பற்றி நாங்களெல்லாம் சொல்லாத வார்த்தைகளைச் சொல்லி, ஏளமானப் பேசியவர்கள், குறைத்துப் பேசியவர்கள் இன்று அவரோடு கூட்டணியில் இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட, ஒரு கூட்டணி, தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து துரோகம் செய்யக்கூடிய கூட்டணி, இந்த தமிழ்நாட்டை டெல்லியில போய் அடகு வைக்கக்கூடிய அதிமுக, அதிமுக இன்று அண்ணா திமுகவிலிருந்து அமித்ஷா திமுக என்று சொல்லக்கூடிய அளவுக்குவந்துவிட்டது. எனவே, அவர்களுக்கு இந்தத் தேர்தலிலே சரியான ஒரு பாடத்தைச் சொல்லித் தர வேண்டும்.
ஒன்றிய அரசாங்கம் டெல்லியிலிருந்து தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்கறதே இல்லை. பிரதமர் வீடு கொடுக்கும் திட்டம் பார்த்திருக்கீறீர்களா? மோடி வீடுன்னு சொல்வீங்க. கட்டிக்கொடுத்த வீடெல்லாம் அவர் பெயரில்தான் கட்டிக்கொடுக்கப்பட்டிருக்கு. ஆனா.. அதற்கான நிதியை யார் கொடுத்தாங்கன்னு தெரியுமா?
நம்முடைய முதலமைச்சர்தான் 61சதவீதம் அதற்கு நிதி கொடுத்திருக்கார். 39 சதவீதம் நிதியை மட்டும்தான் அவர் கொடுத்தார். ஆனா.. பேர் மட்டும், ஸ்டிக்கர் மட்டும் ஒட்டிருக்காங்க.
எல்லாத் திட்டங்களுக்கும் பெயரை வைத்துகொள்கிறார்களே தவிர, அது புரியாத பெயர்.. ஹிந்திப்பெயர்.. முதன் முதலில் தூத்துக்குடில போய் திட்டத்தின் பெயர் ஒன்றைப் படித்தேன். பிரதான் மந்திரி ஜடக் யோஜனான்னு.. அது என்னனான்னு எனக்குப் புரியவில்லை. அப்புறம் போய் நான் கேட்டபோது, கிராம சாலைகள் திட்டம் என்று தெரியவந்தது. கிராமத்தில் இருக்கக்கூடியவர்களுக்கு அது என்னான்னு எப்படி புரிஞ்சு, அதுல என்ன பண்றாங்கன்னு எப்படி போய்ச்சேரும்? அது தெரிஞ்சுக்கனுமின்னா ஹிந்தி படிக்கணும். அது மட்டும்தான் மோடி அவங்களுக்கும் ஒன்றிய அரசாங்கத்திற்கும் இந்தி படிக்கணும்.
வேற நம்மைப் பற்றியும், எதைப் பற்றியும் கவலையே கிடையாது அவங்களுக்கு. இங்க இருக்ககூடிய சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயல்படக் கூடியவர்கள். ஒற்றுமையாக வாழ்வதைக் குலைக்கக்கூடியவர்கள். ஒற்றுமையாக, நிம்மதியாக அமைதியாக ஒரு இடத்தில் இருந்தால்தான், வேலைவாய்ப்புகள் உருவாகக்கூடிய வாய்ப்புகள் உருவாகும்.
அதனால தமிழ்நாட்டிற்கு இத்தனை தொழிற்சாலைகள் இங்கு வருது. இத்தனை பிள்ளைகள் படித்துவிட்டு நல்லா இருக்க முடியுது. இதையெல்லாம் கெடுக்கக்கூடிய டெல்லியிலே இருக்கக்கூடிய பிஜேபி ஆட்சி, இங்க இருக்கக்கூடிய அதிமுக வழியாக தமிழ்நாட்டிற்கு வந்துவிடக் கூடாது என்பதில் நாம் இந்தத் தேர்தலில் உறுதியாக இருக்க வேண்டும்.
இந்தப் பகுதியிலே நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கொண்டுவந்திருக்கக்கூடிய திட்டங்கள், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் கிட்டத்தட்ட 77.02 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெகா உணவுப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் சுமார் 4000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும் வழிவகை ஏற்பட்டுள்ளது.திருநெல்வேலியில் அடுக்குமாடி கட்டடம், நவீன பார்க்கிங் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் 78 கோடி ரூபாய் மதிப்பில் ஜங்ஷன் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டது.
அடுத்து நம்ம ஆட்சி வந்தவுடன், திருநெல்வேலியில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும். திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான நவீன சிகிச்சை வசதிகள் ஏற்பாடு செய்து தரப்படும். திருநெல்வேலி மாவட்டத்தில் மின் பேருந்து சேவை தொடங்கப்படும். அதுமட்டுமில்லாமல் அடுத்த ஆட்சிக்கு வந்தவுடன் 10 ஆயிரம் பஸ்கள் வாங்கப்படும். வாங்கிட்டா.. இனிமே யாருமே பஸ் வரல என்று சொல்ல முடியாத அளவுக்கு, எல்லாப்பகுதிகளுக்கும் பேருந்து வசதிகள் செய்து தரப்படும்.
அடுத்த ஐந்தாண்டுகளில் 35 லட்சம் இளைஞர்களுக்கு இளம்பெண்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்படும். காலை உணவுத்திட்டம் 5வது வகுப்பு வரை இப்போது உள்ளது. ஆட்சிக்கு வந்ததும் அது 8வது வகுப்பு வரை உயர்த்தி வழங்கப்படும். 8வதோட நம்ம முதலமைச்சர் நிறுத்த மாட்டார். 5ல் ஆரம்பித்து காலை உணவுத்திட்டத்தை தொடங்கியது நமது முதலமைச்சர். அதைப்பார்த்து மற்றவர்களும் இப்போது தொடங்க ஆரம்பித்திருக்கிறார்கள். இப்ப 5வது, அடுத்து 8வது, அப்புறம் 12வது வந்துதான் நிறுத்தவார்.
நம்ம பிள்ளைகள் படிக்கணும், நல்ல நிலைக்கு வரணும் என்று நினைக்கக்கூடிய ஆட்சி நம்முடைய திராவிட முன்னேற்றக்கழக ஆட்சி. அது மறுபடியும் தமிழ்நாட்டிற்கு வந்து, தமிழ் மக்களுடைய எதிர்காலத்தைப் பாதுகாக்க, தமிழ்மொழியைப் பாதுகாக்க, தமிழர்களின் உரிமையைப்பாதுகாக்க, இந்த நிலத்தைப்பாதுகாக்க, மறுபடியும் நம்முடைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை இங்கே ஆட்சிப்பொறுப்பிற்கு கொண்டுவருவதற்கு, இந்தத் தொகுதியிலே உங்களுடைய வேட்பாளர் சுப்பிரமணியம் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலே வாக்களித்து அவரை வெற்றிபெற்றச் செய்ய வேண்டும் என்று உங்களையெல்லாம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.
திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளர் அப்துல் வகாப், திருநெல்வேலி தொகுதி பார்வையாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்தரன், திமுக மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் விஜிலா சத்தியானந்த், திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
ட்ரெண்டிங் செய்திகள்



















