Coimbatore Election Results 2022| கோவை மாநகராட்சியில் 22 வயது திமுக வேட்பாளர் நிவேதா வெற்றி - மேயர் ரேஸில் பங்கேற்க வாய்ப்பு
கோவை மாநகராட்சி 97 வது வார்டில் போட்டியிட்ட 22 வயது இளம் பெண்ணான திமுக வேட்பாளர் நிவேதா சேனாதிபதி 8925 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
![Coimbatore Election Results 2022| கோவை மாநகராட்சியில் 22 வயது திமுக வேட்பாளர் நிவேதா வெற்றி - மேயர் ரேஸில் பங்கேற்க வாய்ப்பு Coimbatore Election Results 2022 22 year old student Nivetha won on behalf of dmk in Coimbatore Corporation in urban local body election results 2022 Coimbatore Election Results 2022| கோவை மாநகராட்சியில் 22 வயது திமுக வேட்பாளர் நிவேதா வெற்றி - மேயர் ரேஸில் பங்கேற்க வாய்ப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/22/aa8869e515a2d3bbe733fe84a73a2f48_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இன்று 17 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆரம்பத்தில் இருந்தே திமுக கூட்டணி முன்னிலையில் இருந்து வந்தது. 7 நகராட்சிகளையும், 31 பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. இதேபோல கோவை மாநகராட்சியையும் திமுக பெரும்பான்மை பலத்துடன் கைப்பற்றியுள்ளது.
வாக்கு எண்ணிக்கை இறுதியில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் திமுக கூட்டணி 96 வார்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளது. திமுக 73 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 9 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்ட 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. 5 வார்டுகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 வார்டுகளில் வென்றுள்ளது. போட்டியிட்ட 3 இடங்களிலும் மதிமுகவும், போட்டியிட்ட 2 இடங்களிலும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. மனிதநேய மக்கள் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. கூட்டணி கட்சியினர் உடன் சேர்த்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 76 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
கோவை மாநகராட்சி 97 வது வார்டில் போட்டியிட்ட 22 வயது இளம் பெண்ணான திமுக வேட்பாளர் நிவேதா சேனாதிபதி 8925 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் சகஸ்ரநாமம் 1139 வாக்குகள் பெற்ற நிலையில், 7786 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான போட்டியில் நிவேதா சேனாதிபதி இருப்பதும், திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் சேனாதிபதியின் மகளான நிவேதா, பஞ்சாப்பில் எம். ஏ. சைக்காலஜி இரண்டாம் ஆண்டு படித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல மேயர் பதவிக்கான போட்டியில் உள்ள முன்னாள் கவுன்சிலரும், திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக்கின் மனைவியுமான இலக்குமி இளஞ்செல்வியும் வெற்றி பெற்றுள்ளார்.
திமுக பெற்ற அபார வெற்றி அக்கட்சியினர் இடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு நடந்த தேர்தல்களில் இரண்டு முறை கூட்டணி கட்சிகளுக்கு திமுக மேயர் பதவியை வழங்கிய நிலையில், திமுக முதல் முறையாக நேரடியாக இந்த முறை மேயர் பதவியை கைப்பற்ற உள்ளது. அதனால் கோவை மாநகராட்சியின் முதல் பெண் மற்றும் திமுக மேயர் என்பதை பெற திமுகவில் கடும் போட்டி நிலவி வருகிறது. அதில் இத்தேர்தலில் வெற்றி பெற்ற நிவேதா சேனாதிபதி, இலக்குமி இளஞ்செல்வி, மீனா லோகு உள்ளிட்டோருக்கு மேயராக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)