Bihar Election Result: கன்னி வெடியாய் மாறிய காங்கிரஸ்.. கூட்டணி கட்சிகளுக்கே வேட்டு - லிஸ்டில் சேர்ந்த பீகார்
Bihar Election Result 2025: பீகார் சட்டமன்ற தேர்தலில் தேஜஸ்வி யாதவின் பெரும் தோல்விக்கு, கூட்டணியில் இருந்த காங்கிரஸ் (Congress) கட்சியே முக்கிய காரணங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

Bihar Election Result 2025: கூட்டணி கட்சிகளுக்கே காங்கிரஸ் எப்படி ஆபத்தானதாக மாறுகிறது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
பீகாரில் சறுக்கிய எதிர்க்கட்சிகள் கூட்டணி:
பீகார் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியாகி வருகின்றன. தேர்தலுக்கு பிந்தையை கருத்து கணிப்புகளில் சொன்னபடியே, பாஜக மற்றும் நிதிஷ்குமார் அடங்கிய கூட்டணி 180-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன. அதேநேரம் கடும் போட்டியை அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் மற்றும் நிதிஷ்குமார் அடங்கிய கூட்டணி, சுமார் 50 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து கடும் பின்னடைவை சந்தித்துள்ளன. குறிப்பாக காங்கிரஸின் நிலைமை அதளபாதாளத்திற்கு சென்றுள்ளன.
அதளபாதாளத்தில் காங்கிரஸ்:
2020 பீகார் சட்டமன்ற தேர்தலில் 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது. இதனால் கடும் இழுபறி மற்றும் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்த தேர்தலில் 61 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. ஆனால், அதிலும் பெரும் சரிவை கண்டு தற்போதைய சூழலில் வெறும் 6 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளன. இது ஒரு காலத்தில் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ், தற்போது பீகார் மக்களிடையே எந்தளவிற்கு துடைத்து எறியப்பட்டுள்ளது என்பதை காட்டுகிறது. காங்கிரஸின் இந்த படுதோல்வி அவர்களுக்கு மட்டுமின்றி, தேஜஸ்வியின் கூட்டணிக்கும் மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், கூட்டணி கட்சிகளுக்கு வேண்டா சுமையாக காங்கிரஸ் மாறுவது என்பது இது முதல்முறை அல்ல.
கட்சியா? கூட்டணியா? - குழப்பத்தில் காங்கிரஸ்
கூட்டணியின் பொதுவான இலக்கா? தங்கள் கட்சியின் இருப்பை வலுப்படுத்துவதா? இரண்டில் எது முதன்மையானது என்பதில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குழப்பத்தில் நிலவுகிறது. பல நேரங்களில் கூட்டணியை காட்டிலும் கட்சியின் சொந்த நலன்களை தேர்வு செய்வதால், காங்கிரஸ் மட்டுமின்றி அது இடம்பெறும் கூட்டணியும் பாதிக்கப்படுகிறது. உதாரணமாக, பீகார் தேர்தலில் தங்களது நிலையை உணர்ந்து குறைவான தொகுதிகளில் போட்டியிட்டு இருந்தால், எதிர்க்கட்சிகளின் கூட்டணி இவ்வளவு மோசமான தோல்வியை சந்தித்திருக்க வாய்ப்பில்லை என்பதே அரசியல் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. நட்பு கட்சிகளுக்கு எதிராகவே வேட்பாளர்களை நிறுத்துவதும், கூட்டணிக்கு எதிரான மனநிலையை மக்களிடையே ஏற்படுத்துகிறது.
லிஸ்டில் பீகார்:
வட இந்தியாவின் பல மாநிலங்களில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியாத நிலையில் இருந்தாலும், வெற்றி தோல்வியை தீர்மானிக்கக் கூடிய கணிசமான வாக்கு வங்கியை பெற்றுள்ளது. இதன் காரணமாகவே இருந்தாலும் தொல்லை, இல்லாவிட்டாலும் தொல்லை என்ற மனநிலையுடன் பல கட்சிகள் காங்கிரஸை கூட்டணியில் சேர்க்கின்றன. இதனை உணர்ந்து சமரசமாக செயல்பட மறுக்கும் காங்கிரஸ், கூடுதல் இடங்களை கேட்டு தொல்லை செய்கிறது. வேறு வழியின்றி ஒதுக்கினாலும், தீவிர களப்பணி செய்து வெற்றி பெற முயற்சிகள் கூட மேற்கொள்ளாமல் படுதோல்வியை சந்திக்கிறது.
ஏற்கனவே ஹரியானா மற்றும் டெல்லியில் தொகுதி ஒதுக்கீட்டில் ஆம் ஆத்மி கட்சியுடன் மோதல் போக்கை பின்பற்றி, காங்கிரஸ் தனித்து போட்டியிட்டதே பாஜகவின் வெற்றிக்கு வழிவகுத்தது. மேற்குவங்க மக்களவை தேர்தலிலும் திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக வேட்பாளர்களை களமிறக்கி, பாஜக 12 தொகுதிகளை வெல்ல வாய்ப்புகளை உருவாக்கி தந்தது. அந்த வரிசையில் தற்போது பீகாரும் இணைந்துள்ளது.
பண்ணையார் மனப்பான்மையில் காங்கிரஸ்
அதிகாரத்தில் இல்லாவிட்டாலும் காங்கிரஸ் கட்சி பண்ணையார் மனப்பான்மையிலேயே செயல்படுவதாக காங்கிரஸ் மீது பொதுவான விமர்சனம் உள்ளது. அதாவது களத்தில் இறங்கி ஏதும் வேலை செய்யாமல், கூட்டணி கட்சிகளின் நிழலிலேயே பயணித்து வெற்றி பெற்றுவிடலாம் என்ற நினைப்பில் இருப்பதே பல மாநிலங்களில் காங்கிரஸின் படுதோல்விக்கு காரணமாகிறது. ஆனாலும், கட்சியை மறுசீரமைப்பது, இளைஞர்களை கட்சியின் பக்கம் இழுப்பது, நவீன காலத்திற்கு ஏற்ப அப்டேட் ஆவதோடு, சூழலுக்கு ஏற்ப கூட்டணி கட்சிகளுடன் சமரசம் செய்து பயணிப்பது என பல்வேறு அம்சங்களில் உள்ள ஓட்டைகளை அடைக்க எந்தவித முயற்சியிலும் மேற்கொள்ளாமல் இருக்கிறது. இப்படியே சென்றா கழுதை தேய்ந்து கட்டெறும்பாக போன கதை தான் காங்கிரசுக்கு பொருந்தும். அதேநேரம், கூட்டணி கட்சிகளுக்கும் காலுக்கடியில் இருக்கும் கன்னிவெடியாகவே தொடரும்.





















