Bihar Election Result: இலவச மின்சாரம், கையில் காசு புரள திட்டம்.. வாக்குகளாக மாறிய NDA-வின் வாக்குறுதிகள் - எப்படி?
Bihar Election Result 2025: பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக, நிதிஷ்குமார் கூட்டணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த வாக்குறுதிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Bihar Election Result 2025: பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக, நிதிஷ்குமார் கூட்டணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த வாக்குறுதிகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
பாஜக கூட்டணி முன்னிலை:
பீகார் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவைப்படுகிறது. ஆனால், பாஜக மற்றும் நிதிஷ்குமார் கூட்டணி 190-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் தேஜஸ்வி யாதவின் கூட்டணி வெறும் 40-க்கும் அதிகமான இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் பாஜக கூட்டணிக்கு சாதகமாக அமைந்த வேலைவாய்ப்பு உருவாக்கம், அதிகப்படியான முதலீடு மற்றும் பெண்கள் தலைமையிலான பொருளாதார மாற்றம் ஆகியவற்றை உள்ளடக்கிய தேர்தல் வாக்குறுதிகள் என்ன என்பது கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
பாஜக கூட்டணி தேர்தல் வாக்குறுதிகள்
1. பொருளாதார வலுவூட்டல் மூலம் பெண்கள் நலன்
எதிர்க்கட்சிகளின் நேரடியாக பணத்தை பயனர்களின் கைகளில் வழங்குவதை போலன்றி, தேசிய ஜனநாயகக் கூட்டணி திறன் மேம்பாடு, கடன் அணுகல் மற்றும் சுயஉதவிக் குழுவை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் என உறுதியளித்தது. உள்ளூர் நிறுவனங்கள், கிராமப்புற தொழில்கள் மற்றும் விவசாயம் சார்ந்த வணிகங்களில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்கும், பீகாரின் பொருளாதார வளர்ச்சியின் மையமாக அவர்களை நிலைநிறுத்துவதற்கும் விரிவான செயல்திட்டத்தை முன்னெடுத்தது.
2. உட்கட்டமைப்பு வசதிகள்
ஏழு புதிய விரைவுச் சாலைகள், 3,600 கி.மீ ரயில் பாதைகளை நவீனமயமாக்குதல் மற்றும் 10 புதிய தொழில் பூங்காக்கள் அமைத்தல் உள்ளிட்ட தீவிரமான உள்கட்டமைப்பு விரிவாக்கத் திட்டத்தை NDA உறுதியளித்துள்ளது. இந்த அளவிலான இணைப்பு மற்றும் தொழில்துறை விரிவாக்கம் மாநிலம் முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை கணிசமாக உயர்த்தும் என்று தெரிவித்துள்ளது. ஒரு வீட்டிற்கு 125 யூனிட் இலவச மின்சாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மின்சார விநியோக நம்பகத்தன்மை மற்றும் கிராமப்புற மின்மயமாக்கலை மேலும் மேம்படுத்துவதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
3. சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு
சுகாதாரத் துறையில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் தற்போதுள்ள சலுகைகளை மேம்படுத்தி, ரூ.5 லட்சம் வரை மலிவு விலையில் மருத்துவ காப்பீட்டை தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. மாவட்ட மருத்துவமனைகளை மேம்படுத்தப்படுவதையும், அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதையும் உறுதி செய்துள்ளது. எதிர்க்கட்சிகள் உறுதியளித்த நேரடி பணப் பரிமாற்றங்கள் இல்லாமல், மூத்த குடிமக்கள், விதவைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கான மேம்பட்ட நலத்திட்டங்கள் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இணைக்கப்பட்டுள்ளது.
4. வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாடு
விவசாய உள்கட்டமைப்பில் ரூ.1 லட்சம் கோடி முதலீட்டை தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்துள்ளது, அதே நேரத்தில் தொழில்துறை வளர்ச்சிக்கு ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. நவீன குளிர்பதனச் சங்கிலிகள், உணவு பதப்படுத்துதல், நீர்ப்பாசன மேம்பாடுகள், பயிர் பல்வகைப்படுத்தல் மற்றும் தளவாட சீர்திருத்தங்கள் ஆகியவை இதில் அடங்கும். இதனால் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும் மற்றும் கிராமப்புற துயரங்கள் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் அதன் வளர்ச்சிப் பாதையைத் தக்கவைக்க திடீர் கொள்கை மாற்றங்கள் அல்ல, நிலையான முதலீடு தேவை என்று தேசிய ஜனநாயக கூட்டணி வாதிட்டது. அதன் வெளிப்பாடாக வெற்றியையும் வசப்படுத்தியுள்ளது.





















