Rahul Gandhi: பீகாரில் சந்தி சிரிக்கும் காங்கிரஸ்... இந்தியாவில் இல்லாத ராகுல் காந்தி - இப்படி இருந்தா எப்படி?
Bihar Election 2025 Result: காங்கிரஸ் தேர்தலை எவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்கிறார்கள் என்பதற்கு இதெல்லாம் ஒரு அளவுகோல்.

பீகார் தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை என்ற நிலையில் 188 தொகுதிகளுக்கு மேல் பாஜக கூட்டணி முன்னிலையில் இருக்கிறது. இண்டிய கூட்டணி 50 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
பீகாரில் கடந்த 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடக்கத்தில் இருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கையே ஓங்கி இருக்கிறது. இண்டிய கூட்டணி தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகிறது. இதில், காங்கிரஸின் நிலைமை மோசமாக உள்ளது.
காங்கிரஸ் கட்சி பீகார் தேர்தலில் 61 இடங்களில் போட்டியிட்டு, வெறும் 6 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருவது காங்கிரஸ் கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸின் இத்தகைய நிலைமைக்கு இறுதி கூட்டணியை உறுதி செய்யாமல் இருந்து வந்ததால் அக்கட்சி இந்த நிலைமையில் இருப்பதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
ஐரோப்பாவில் இருக்கும் ராகுல் காந்தி
பீகார் தேர்தல் நிலவரம் இந்த நிலைமையில் இருக்க, அக்கட்சியின் பெரிய முகமாக பார்க்கப்படும் ராகுல் காந்தி தற்போது ஐரோப்பாவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தனியார் தொலைக்காட்சி விவாதத்தில், தேர்தல் முடிவுகள் வெளிவரும் சமயத்தில் ராகுல் காந்தி வெளியூரில் இருந்தார் என்றும் தேர்தல் முடிவுகள் வெளிவரும் இன்று கூட ஐரோப்பாவில் இருக்கிறார் என்றும் கூறியுள்ளார். இதோபோல், பிரியங்கா காந்தி நியூயார்க்கில் இருக்கிறார் என்றும் கூறினார். மேலும், தேர்தலை எவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்கிறார்கள் என்பதற்கு இதெல்லாம் ஒரு அளவுகோல் என்றும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கும் 65 லட்சம் பேரை நீக்கிய பின் வேறு எந்த முடிவை எதிர்பார்க்க முடியும்? என்று கூறிய காங்கிரஸ், பாஜகவுக்கு ஆதரவாக தலைமைத் தேர்தல் ஆணையர் செயல்படுவதாக குற்றச்சாட்டு வைத்துள்ளது. மேலும், எதிர்க்கட்சி வாக்களிக்கும் 65 லட்சம் பேரை நீக்கிய பின் வேறு எந்த முடிவை எதிர்பார்க்க முடியும்?. ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே வெற்றியாளரை அறிவித்துவிட்டால் ஜனநாயகம் எப்படி பிழைக்கும்? என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளது.





















