![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
மாநிலங்களவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்களா? என்ன முடிவெடுக்க போகிறது அதிமுக?
அதிமுகவை சேர்ந்த இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்களான வைத்திலிங்கம் மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோர் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் அவர்கள் இருவரும் எதாவது ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழலில் எழுந்துள்ளது.
![மாநிலங்களவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்களா? என்ன முடிவெடுக்க போகிறது அதிமுக? After Election of 2 Rajyasabha MP to TN legislative Assembly, TN might get Rajya Sabha Bye-elections for 3 seats மாநிலங்களவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்களா? என்ன முடிவெடுக்க போகிறது அதிமுக?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/04/74cfdec16d67da7a9e8220f609eaa03d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்ற திமுக கூட்டணி வரும் 7-ஆம் தேதி ஆட்சியமைக்க உள்ளது. அதிமுக கூட்டணி 76 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் ஒரத்தநாடு தொகுதியில் வைத்திலிங்கமும், வேப்பனஹள்ளி தொகுதியில் கே.பி.முனுசாமியும் வெற்றி பெற்றனர். இவர்கள் இருவரும் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளனர். இதனால் இவர்கள் தற்போது ஏதாவது ஒரு பதவியை ராஜினாமா செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி பார்த்தால் இவர்கள் மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்தாலும் அதிமுகவிற்கு பின்னடைவுதான். சட்டமன்ற தொகுதி பதவியை ராஜினாமா செய்தாலும் அதிமுகவிற்கு பின்னடைவுதான். ஒருவேளை இவர்கள் இருவரும் சட்டமன்ற பதவியை ராஜினாமா செய்தால் அதிமுக கூட்டணியின் பலம் குறையும். அத்துடன் இடைத்தேர்தலில் மீண்டும் அதிமுக இந்த தொகுதிகளில் வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவுக்கு பெரிய சவாலாக அமையும். ஏனென்றால் பொதுவாக இடைத்தேர்தலில் ஆளும் கட்சியின் வேட்பாளர்களே வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சட்டமன்றத்தில் அதிமுகவுக்கு இது ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.
இவர்கள் இருவரும் தங்களுடைய மாநிலங்களவை இடத்தை ராஜினாமா செய்தால் அதுவும் அதிமுகவிற்கு பின்னடைவாக அமையும். ஏனென்றால் தற்போது மாநிலங்களவையில் அதிமுகவிற்கு 7 எம்பிக்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் ராஜினாமா செய்தால் அதிமுவின் பலம் 5-ஆக குறையும். மேலும் கடந்த மார்ச் மாதம் அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். எனவே மொத்தமாக மாநிலங்களவையில் தமிழ்நாட்டில் 3 இடங்கள் காலியாக இருக்கும். இந்த 3 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் நடைபெறும்.
அதன்படி மொத்தம் உள்ள 234 எம்.எல்.ஏ-க்கள் வாக்களிப்பார்கள். இதில் ஒரு நபர் வெற்றிபெற வேண்டும் என்றால் (234*100/(3+1))+1 = 5851 வாக்குகளை பெற வேண்டும். அதாவது 59 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை பெறவேண்டும். ஏனென்றால் ஒரு எம்.எல்.ஏ-இன் ஓட்டு 100-ஆக கணக்கிடப்படும். அதன்படி தற்போதைய சட்டமன்ற பலத்தை வைத்து பார்த்தால் திமுகவிற்கு 2 இடங்களும் அதிமுகவுக்கு ஒரு இடமும் கிடைக்கும். அதிமுகவிடம் இருந்த 3 மாநிலங்களவை பதவியில் 2 திமுகவுக்கு சென்றுவிடும். இதன்காரணமாக மாநிலங்களவையில் திமுகவின் பலம் 9 ஆக உயரம். அத்துடன் மதிமுக சார்பில் வைகோ மாநிலங்களவை எம்பியாக உள்ளார். எனவே திமுக கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் எண்ணிக்கை 10-ஆக உயரும். இது அதிமுகவிற்கு பெரிய பின்னடைவாக இருக்கும். ஏற்கெனவே மக்களவையில் அதிமுகவிற்கு ஒரே ஒரு எம்.பி இருக்கும் சூழலில் மாநிலங்களவையிலும் அதன் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறையும்.
மேலும் வைத்திலிங்கத்தின் பதவிக்காலம் வரும் 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முடியவுள்ளது. இதனால் இந்த தேர்தலில் வரும் இடமும் அடுத்த முறை தேர்தலில் அதிமுகவுக்கு பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது. எனவே அதிமுகவிற்கு எப்படி இருந்தாலும் அது பெரிய பின்னடைவாக அமையும். பொதுவாக ஒரு மாநிலங்களவை உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அவரது பெயர் அரசு இதழில் வந்த 14-ஆவது நாளில் அவருடைய மாநிலங்களவை பதவி பறிபோகும். அதற்கு முன்பாகவும் அவர் தனது மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்யலாம் அல்லது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யலாம். எனவே இந்த இருவரும் எந்தப் பதவியை ராஜினாமா செய்ய போகின்றனர் என்று பலரும் எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)