WB Election 6th Phase Voting: மேற்கு வங்கத்தில் 6-ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது..
மேற்கு வங்கத்தில் ஆறாம் கட்ட தேர்தல் தொடங்கியது. வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் 43 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான ஆறாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் கடந்த 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று முடிந்தது. அசாமில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் முடிவடைந்துவிட்டது. மேற்கு வங்க மாநிலத்தில் எட்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. திரிணாமூல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஏற்கெனவே 180 தொகுதிகளுக்கு ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் ஆறாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
வடக்கு 24 பர்கானாக்கள், நாடியா, கிழக்கு பர்தமான், உத்தர் தினாஜ்பூர் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த 43 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதில் 306 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பாஜக தேசிய துணைத் தலைவர் முகுல் ராய், திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜோதி பிரியா மாலிக், சந்திரிமா பட்டாச்சார்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தன்மய் பட்டாச்சார்யா ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர். 27 பெண்கள், 82 சுயோச்சைகளும் இதில் அடங்குவர்.
மேலும், திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் திரைப்பட இயக்குநர் ராஜ் சக்கரவர்த்தி, நடிகை கெளஷானி முகர்ஜி ஆகியோரும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். 14,480 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1,071 கம்பெனி துணை ராணுவமும் களமிறக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் 1.03 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். அதில், 52.21 லட்சம் ஆண் வாக்காளர்கள், 50.65 லட்சம் பெண் வாக்காளர்கள், 256 மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவர்.
ஏழாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 26-ஆம் தேதியும், கடைசி கட்ட வாக்குப்பதிவு 29-ஆம் தேதி நடைபெற உள்ளன. மே 2-ஆம் தேதி வாக்குக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் கடைசி மூன்று கட்ட தேர்தலை ஒரே கட்டமாக நடத்தவேண்டும் என முதலைமைச்சர் மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
கடந்த நான்காம் கட்ட தேர்தலிலின் போது சீத்தல்குச்சி தொகுதிக்கு உட்பட்ட ஜார்பட்கி என்ற பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு அருகே திடீரென ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு எந்த அசாம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் அமைதியாக நடைபெற்றது.