World Book Day 2024: தலை குனிந்து பார்; தலை நிமிர வைக்கிறேன்: வாசிப்பின் ரகசியம் தெரியுமா உங்களுக்கு?
ஐ.நா. சார்பில் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 23ஆம் தேதி உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் கொண்டாடப் படுகிறது. இந்த தினத்தைக் குறித்தும் புத்தக வாசிப்பைப் பற்றியும் இந்தக் கட்டுரையில் அறியலாம்.
அகமாகிய உள்ளத்தை புதுப்பிப்பதாலேயே புத்தகம் என்று பெயர் சூட்டப்பட்டது. (புதுமை+ அகம்- புத்தகம்)
தனக்கு நஞ்சு அளிக்கப்படும் வரை வாசித்துக் கொண்டிருந்தார் சாக்ரடீஸ்; தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லும் வரை படித்துக் கொண்டிருந்தார் மாவீரன் பகத் சிங். படித்துக் கொண்டிருந்த நூலை முடிக்க வேண்டும் என்பதற்காகத் தனக்கு நடைபெற வேண்டி இருந்த அறுவை சிகிச்சை தேதியையே மாற்றி வைக்கச் சொன்னார் பேரறிஞர் அண்ணா.
ஓர் ஊரில் நூலகம் திறக்கப்படும்போது அங்குள்ள சிறைச்சாலை மூடப்படும் என்றார் விவேகானந்தர்.
சர்வதேச புத்தக மற்றும் காப்புரிமை தினம் இன்று (ஏப்ரல் 23) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. வாசித்தல், பதிப்பித்தல், அறிவாற்றல் சொத்துகளை பதிப்புரிமை மூலம் பாதுகாக்கும் நோக்கில் ஐ.நா. சார்பில் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 23ஆம் தேதி உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் கொண்டாடப்படுகிறது.
ஏன் இந்தத் தேதி?
உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களான வில்லியன் ஷேக்ஸ்பியர், செர்வாண்டிஸ், இன்கா கார்சிலாசோ போன்றோர் ஏப்ரல் 23ஆம் தேதி மறைந்தனர். நூலாக்கத்தில் இவர்களது பங்களிப்பை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் புத்தக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1995ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற யுனேஸ்கோ கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது
தலைநிமிர்ந்து நடக்க வைக்கிறேன்..!
தலை குனிந்து என்னைப் பார். தலை நிமிர்ந்து உன்னை நடக்க வைக்கிறேன் என்று சொல்வது புத்தகம்தான். சாதி, மதம், மொழி, இனம் ஆகிய ஏற்றத் தாழ்வுகளைத் தாண்டி கல்வி ஒன்றுதான் எல்லாவற்றுக்குமான ஏணிப் படியாக இருக்கிறது. அந்த கல்வி புத்தகங்கள் வழியாகவே கிடைக்கிறது.
எதை எப்படிப் படிக்க வேண்டும் என்பதை அறிந்து படித்தல் நன்மை பயக்கும். சில புத்தகங்களைப் படிக்க வேண்டும். சிலதை அசைபோட வேண்டும். சிலவற்றை உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.
இன்ஸ்டா ரீல்ஸில் மூழ்கும் இளம் தலைமுறை
புத்தகத்தின் அருமையையும் உன்னதத்தையும் இன்று கொஞ்சம் கொஞ்சமாக மறந்துவிட்டு, செல்போனிலும் லேப்டாப்பிலும் மூழ்கிக் கொண்டிருக்கிறோம். எழுத்துகள் நம்மை யோசிக்க வைக்கும். கற்பனை செய்துகொள்ளத் தூண்டும். கதாபாத்திரங்களை சித்தரிக்க வைக்கும். ஆனால் காட்சிகள் நம்மை உள்வாங்க மட்டுமே வைக்கும். இதை நாம் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.
இன்றைய இளம் தலைமுறை எழுத்துகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி, இன்ஸ்டா ரீல்களிலும் வாட்ஸ் அப் சாட்களிலும் நேரத்தைப் போக்கிக் கொண்டிருக்கிறது.
புத்தகங்களைப் பரிசாக அளியுங்கள்
அன்புக்குரியவர்கள் யாருக்கேனும் ஏதாவது பரிசளிக்க வேண்டும் என விரும்பினால், அவர்களுக்கு உகந்த புத்தகங்களை வாங்கிப் பரிசாக அளியுங்கள். அது நிச்சயம் அவர்களின் சிந்தனையைத் தூண்டும் வகையில் அமையும்.