World Bank: உலக வங்கியில் இன்டர்ன்ஷிப்: சர்வதேசத் தரத்தில் பணி அனுபவம் பெற மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!
World Bank: சர்வதேச வளர்ச்சித் திட்டங்களில் நேரடிப் பணி அனுபவம் பெற விரும்பும் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

உலக அளவில் செல்வாக்கு மிக்க நிதி நிறுவனமான உலக வங்கி குழுமம் (World Bank Group), தனது புகழ்பெற்ற WBG பயோனியர்ஸ் இன்டர்ன்ஷிப் 2026 (WBG Pioneers Internship) திட்டத்திற்கான விண்ணப்பங்களைப் பெறத் தொடங்கியுள்ளது. சர்வதேச வளர்ச்சித் திட்டங்களில் நேரடிப் பணி அனுபவம் பெற விரும்பும் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
- இளநிலை மாணவர்கள்: பட்டப் படிப்பின் இறுதியாண்டு பயின்று கொண்டிருக்க வேண்டும்.
- முதுநிலை மாணவர்கள்: முதுகலை அல்லது முனைவர் பட்டம் பயின்று கொண்டிருக்க வேண்டும்.
- 6 ஆண்டுகள் வரை பணி அனுபவம் உள்ளவர்களும் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். சிறந்த கணினி மற்றும் தொழில்நுட்பத் திறன் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகக் கருதப்படும்.
பணி வழங்கப்படும் துறைகள்
பொருளாதாரம், முதலீடு, பொது சுகாதாரம், கல்வி, சமூக அறிவியல் (மானுடவியல் மற்றும் சமூகவியல்), விவசாயம், சுற்றுச்சூழல், நகர்ப்புறத் திட்டமிடல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளில் இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. இது தவிர, கணக்கியல், மனிதவளம், தகவல் தொடர்பு மற்றும் நிதி போன்ற கார்ப்பரேட் பணிகளிலும் மாணவர்கள் பயிற்சி பெறலாம்.
சலுகைகள் மற்றும் இடம்
தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு மணிநேர அடிப்படையில் ஊக்கத்தொகை (Stipend) வழங்கப்படும். இந்த இன்டர்ன்ஷிப் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள தலைமையகத்திலோ அல்லது உலக வங்கியின் பிற நாட்டு அலுவலகங்களிலோ அமையக்கூடும். தங்குமிட வசதிகளை மாணவர்களே கவனித்துக்கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை
ஆர்வமுள்ள மாணவர்கள் பிப்ரவரி 17, 2026-க்குள் உலக வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் தன்விவரக் குறிப்பு (CV), இத்திட்டத்தில் சேர விரும்புவதற்கான நோக்கம் குறித்த கடிதம் (Statement of Interest) மற்றும் கல்விச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும். ஒருமுறை சமர்ப்பித்த விண்ணப்பங்களை மீண்டும் திருத்த முடியாது என்பதால் கவனமாகப் பதிவேற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முக்கியத் தேதிகள்
நேர்காணலுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு மார்ச் 2026-ல் தகவல் தெரிவிக்கப்படும். இறுதித் தேர்வு மார்ச் மாத இறுதியில் நிறைவடையும். இன்டர்ன்ஷிப் பயிற்சிகள் ஏப்ரல் 2026 முதல் செப்டம்பர் 2026 வரையிலான காலப்பகுதியில் நடைபெறும்.
சர்வதேச அளவில் தனது வாழ்க்கையைத் தொடங்க விரும்பும் மாணவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.
கூடுதல் விவரங்களுக்கு உலக வங்கியின் https://www.worldbank.org/en/about/careers/WBG-Pioneers#1 என்ற இணையதள முகவரியைப் பார்வையிடலாம்.






















