Vice chancellors meet: முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையில் ஆக. 17-ல் துணைவேந்தர்கள் மாநாடு: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 17ஆம் தேதி தமிழகத்தில் உள்ள துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 17ஆம் தேதி தமிழகத்தில் உள்ள துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மாநில அரசு அமைந்த பிறகு, ஆளும் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகின்றது. உதகையில் ஆளுநர் ரவி தலைமையில் அனைத்து மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்றது. அதே நேரத்தில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதேபோல கடந்த மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா
பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதா கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. புதிய மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக, அதிமுக வெளிநடப்பு செய்தது. துணைவேந்தரை மாநில அரசே நியமிக்க அதிகாரமளிக்கும் மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக அதிமுக அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்ட மசோதா மீது உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில அரசை மதிக்காமல் ஆளுநர் செயல்படும் போக்கு தலைதூக்கி இருப்பதாகவும், துணை வேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசை ஆளுநர் மதிக்காமல் செயல்படுவது மக்கள் ஆட்சிக்கு விரோதமானது என்றும், துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநருக்கு அளிக்கக்கூடாது என பூஞ்சி ஆணையம் பரிந்துரைத்துள்ளதாகவும் கூறினார்.
உதகையில் ஆளுநர் ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடந்த நிலையில் மசோதா நிறைவேற்றப்பட்டது பேசுபொருளாக அமைந்தது. ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களிலும் துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளது. குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை பின்பற்றி தமிழ்நாட்டிலும் துணை வேந்தர்களை அரசே நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 17ஆம் தேதி தமிழகத்தில் உள்ள துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துச் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், மாநில அரசின் உரிமைகளைப் பயன்படுத்தி, இந்த மாநாடு நடைபெற உள்ளதாகத் தெரிவித்தார்.
முதலமைச்சர் முக.ஸ்டாலின் தொடங்கி வைத்த நான் முதல்வன் திட்டத்தின் அடிப்படையில் மாநாடு தொடங்க உள்ளது என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்