UPSC Result TN Topper: யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த புவனேஷ் ராம் - விவரம்!
UPSC Result 2024 Tamilnadu Topper: 2016 முதல் யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகி வருகிறார். பிஎஸ்சி இயற்பியல் பட்டதாரியான புவனேஷ் ராம் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
2023ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் இறுதித் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், தமிழ்நாட்டில் இருந்து புவனேஷ் ராம் என்னும் தேர்வர் முதலிடம் பிடித்துள்ளார். அவர் அகில இந்திய அளவில் இவர் 41ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.
குடிமைப் பணிக்கான யுபிஎஸ்சி தேர்வுகள், ஆண்டுதோறும் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக நடைபெறுகின்றன. இந்த மூன்று கட்டங்களிலும் தேர்ச்சி பெறும் தேர்வர்களுக்கு அவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், பணிகள் ஒதுக்கப்படுகின்றன. நேர்காணல் தேர்வு முடிந்து தேர்ச்சி பெறாத சூழலிலும், முதலில் இருந்து தேர்வை எழுத வேண்டும்.
1016 பேர் தேர்ச்சி
இந்த நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் பதவிகளுக்கான முதன்மைத் தேர்வுகள் கடந்த ஆண்டு செப்டம்பர் 15 முதல் 24ஆம் தேதி வரை நடைபெற்றன. தொடர்ந்து 2024 ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை நேர்காணல் தேர்வுகள் நடைபெற்றன.
தொடர்ந்து 2023ஆம் ஆண்டுக்கான நேர்காணல் முடிவுகள் இன்று (ஏப்.16) வெளியாகின. இதில், 1016 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அகில இந்திய அளவில் முதல் இடத்தை ஆதித்யா ஸ்ரீவத்சவா (ADITYA SRIVASTAVA) என்னும் தேர்வர் பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தை அனிமேஷ் பிரதான் (ANIMESH PRADHAN) என்பவரும், மூன்றாம் இடத்தை டொனுரு அனன்யா ரெட்டி (DONURU ANANYA REDDY) என்னும் மாணவியும் பெற்றுள்ளனர்.
புவனேஷ் ராம் முதலிடம்
தமிழ்நாட்டில் இருந்து புவனேஷ் ராம் என்னும் தேர்வர் முதலிடம் பிடித்துள்ளார். அவர் அகில இந்திய அளவில் இவர் 41ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். இவர் 2016 முதல் யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகி வருகிறார்.
பிஎஸ்சி இயற்பியல் பட்டதாரியான புவனேஷ் ராம் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் 2019 யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 496ஆவது இடத்தைப் பெற்று இருந்தார். இந்த நிலையில் தற்போது 2023ஆம் ஆண்டு தேர்வில் அகில இந்திய அளவில் 41ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.
யுபிஎஸ்சி தேர்வில் எந்தப் பிரிவினருக்கு எவ்வளவு இடம்?
பொதுப் பிரிவினர் - 347,
பொருளாரத்தில் பின்தங்கிய பிரிவினர்- 115,
ஓபிசி - 303 ,
எஸ்சி - 165,
எஸ்டி - 86 என்ற பிரிவில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஐஏஎஸ் பணிகளுக்கு பொருளாதாரத்தில் பின்தங்கியோர், பொதுப் பிரிவு, ஓபிசி, எஸ்சி, எஸ்டி ஆகிய அனைத்துப் பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம் 180 பேர் தேர்வாகி உள்ளனர். ஐஎஃப்எஸ் பணிக்கு மொத்தம் 37 பேரும் தேர்வாகி உள்ளனர். ஐபிஎஸ் பணிகளுக்கு 200 பேர் தேர்வாகி உள்ளதாக யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது. அதேபோல குரூப் ஏ பிரிவுக்கு 613 பேரும், குரூப் பி பிரிவுக்கு 113 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆக மொத்தம் 1,143 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வர்கள் https://upsc.gov.in/FR-CSM-23-engl-160424.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.