UPSC Result 2022: கால்கள் இல்லை; 3 விரல்தான்! அதனால் என்ன?- யுபிஎஸ்சி தேர்வில் வென்ற இளைஞரின் உத்வேகக் கதை
2017-ல் காஸியாபாத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் தனது இரு கால்களையும் இழந்தார் சூரஜ் திவாரி. அப்போது ஒரு கையும் மற்றொரு கையில் 2 விரல்களும் பறிபோயின.
2022ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில், இதில் நாடு முழுவதும் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் கடுமையான போட்டித் தேர்வாகக் கருதப்படும் யுபிஎஸ்சி தேர்வை பல்வேறு வகையான பின்னணியில் இருந்து வந்த மாணவர்கள் எழுதி, வெற்றிவாகை சூடியுள்ளனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 3 ஐஏஎஸ் அதிகாரிகளின் வாரிசுகள் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும் தமிழ்நாடு அரசு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசுச் செயலாளருமான ஜகந்நாதனின் மகள் சத்ரியா கவின் (D.J. Chathriya Kavin) அகில இந்திய அளவில் 169 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
அதேபோல தமிழ்நாடு அரசுத் தொழிலாளர் ஆணையரக அரசு முதன்மைச் செயலாளர் / ஆணையருமான அதுல் ஆனந்த்தின் மகள் தேர்வர் ஈஷானி (Eshani) 291 ஆவது இடத்தை பிடித்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சி அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையாளருமான டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணனின் மகன் அரவிந்த் இராதாகிருஷ்ணன் (Arvind Radhakrishnan) 361ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
சாதித்த சகோதரிகள்
கடலூர் அருகே ஒரே வீட்டில் இருந்து இரு சகோதரிகள் யுபிஎஸ்சி தேர்வில் வென்று சாதனை படைத்துள்ளனர்.பண்ருட்டி விவசாயி குடும்பத்தைச் சேர்ந்த அக்கா, தங்கை இருவரும் குடிமைப் பணி அதிகாரிகளாகி உள்ளனர். தங்கை ஏற்கெனவே யுபிஎஸ்சி தேர்வெழுதி தேர்ச்சி பெற்று சாதனை படைத்த நிலையில், அக்கா தற்போது குடிமைப் பணியில் தேர்ச்சி பெற்றுள்ளார். தங்கை ஐஸ்வர்யா ராமநாதன் சார் ஆட்சியராக உள்ள நிலையில், அக்கா சுஷ்மிதாவும் தற்பொழுது யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
அந்த வகையில் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் சூரஜ் திவாரி, யுபிஎஸ்சி தேர்வில் வென்று சாதனை படைத்துள்ளார். இவர் 2022ஆம் ஆண்டு தேர்வு முடிவில் 917ஆவது இடத்தைபிடித்துள்ளார்.
யார் இந்த சூரஜ் திவாரி?
உ.பி. மாநிலம், மெயின்புரி மாவட்டத்தில் உள்ள குரவலி கிராமத்தைச் சேர்ந்தவர் சூரஜ் திவாரி. இவர் 2017-ல் காஸியாபாத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் தனது இரு கால்களையும் இழந்தார். அப்போது ஒரு கையும் மற்றொரு கையில் 2 விரல்களும் பறிபோயின. தையல்காரராகப் பணியாற்றும் தந்தை. இல்லத்தரசி தாய் என நடுத்தரக் குடும்பம் அவர்களுடையது. பொருளாதார சூழ்நிலை, மாற்றுத் திறன் ஆகிய இன்னல்களுக்கு இடையிலும் விடாமல் படித்தார் திவாரி.
விடாமுயற்சிக்குப் பரிசாய் 2022ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் 917ஆவது இடத்தைப் பிடித்துள்ளார் சூரஜ் திவாரி. இதுகுறித்து அவரின் தந்தை ரமேஷ் குமார் திவாரி கூறும்போது, இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். என்னுடைய மகன் என்னைப் பெருமை படுத்தி இருக்கிறார். அவன் மிகவும் தைரியமானவன். அவன் வெற்றிபெற 3 விரல்களே போதுமானதாக இருந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.