60 ஆயிரம் கான்ஸ்டபிள் இடங்களுக்கு 48 லட்சம் பேர் போட்டி; வினாத்தாள் கசிந்ததால் உ.பி.யில் மறுதேர்வு
60 ஆயிரத்து 244 பணியிடங்களை நிரப்ப நடத்தப்படும் இந்தத் தேர்வை சுமார் 48 லட்சம் தேர்வர்கள் எழுத உள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வு ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. 60 ஆயிரத்து 244 பணியிடங்களை நிரப்ப நடத்தப்படும் இந்தத் தேர்வை சுமார் 48 லட்சம் தேர்வர்கள் எழுத உள்ளனர். இதில் 16 லட்சம் பேர் பெண்கள் ஆவர்.
ஆகஸ்ட் 23 முதல் 25 வரையும் ஆகஸ்ட் 30- 31 வரையும் 2 ஷிஃப்டுகளாக இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஷிஃப்ட் தேர்விலும் சுமார் 5 லட்சம் தேர்வர்கள் பங்கேற்கும் வகையில் இருக்கும். கிருஷ்ண ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு இந்த நடைமுறை மேற்கொள்ளப்பட உள்ளது.
எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எனினும் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றபிறகே, அடுத்தகட்ட ஆட்சேர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வினாத்தாள் கசிவு காரணமாக தேர்வு ரத்து
முன்னதாக வினாத்தாள் கசிந்த காரணமாக தேர்வு ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்பட்டது. பிப்ரவரி 17, 18 ஆகிய தேதிகளில் 2,835 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. எனினும் 1,174 தேர்வு மையங்களில் முறைகேடு நடந்ததாகவும் வினாத் தாள்கள் கசிந்ததாகவும் புகார் எழுந்த நிலையில், தேர்வுகளை ரத்து செய்து, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். அடுத்த 6 மாதத்துக்குள் வெளிப்படையான முறையில், போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தார்.
The Uttar Pradesh Police Recruitment & Promotion Board is set to conduct its largest recruitment drive, with 48 lakh aspirants competing for 60,244 constable positions.
— Government of UP (@UPGovt) August 21, 2024
The written re-examination will be held from Aug 23-25 and Aug 30-31, with free UPSRTC bus rides available… pic.twitter.com/AEokUP103d
இந்த விவகாரத்தில், 240 பேருக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் தேர்வு நடைபெற உள்ளது. இதில் கடுமையான முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு ஏற்பாடுகளை உத்தரப் பிரதேச அரசு மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.