School building: பாதுகாப்பில்லாத பள்ளிக் கட்டிடங்கள்; திமுக அரசின் மெத்தனப்போக்கு.. ஓபிஎஸ் கண்டனம்
பாதுகாப்பற்ற நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடங்களை சீரமைத்து மாணவ, மாணவியரின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு தி.மு.க. அரசை வலியுறுத்துவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பற்ற நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடங்களை சீரமைத்து மாணவ, மாணவியரின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு தி.மு.க. அரசை வலியுறுத்துவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை:
’’கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள வி.மாமாந்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்து மூன்று மாணவிகள் உள்பட நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளதாக வந்துள்ள செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு, மாணவ, மாணவியரின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கழிப்பறைச் சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்ததோடு, நான்கு மாணவர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போதே, அரசுப் பள்ளிகளில் பழுதடைந்த கட்டுமானங்களை விரைந்து சீர் செய்ய வேண்டுமென்றும், தனியார் பள்ளிகளில் பழுதடைந்த கட்டுமானங்களை உடனடியாக சீர்செய்ய பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தவும் நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சரை வலியுறுத்தி நான் அறிக்கை வெளியிட்டேன்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், ஒவ்வொரு மாவட்டத்திலும் இடிந்து விழும் நிலையில் இருக்கும் பள்ளிக் கட்டிடங்கள், விரிசல் விழுந்துள்ள பள்ளிக் கட்டிடங்கள், செடிகள் வளர்ந்துள்ள பள்ளிக் கட்டடங்கள் குறித்து விவரங்களைப் பெற்று, அதன் அடிப்படையில் சீரமைப்பு மற்றும் இடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், கட்டிடங்கள் இடிக்கப்படும் பட்சத்தில் மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்றும், அருகிலுள்ள பள்ளியுடன் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயப்படும் என்றும், இல்லையெனில் பொதுவான கட்டிடம் ஒன்றை வாடகைக்கு எடுத்து வகுப்புகள் நடத்தப்படும் என்றும் இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறக்கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு கண்ணும் கருத்துமாக இருக்கும்
என்றும் தெரிவித்தார்.
இவ்வாறு உத்தரவாதம் தரப்பட்டும், இந்த ஆண்டு மார்ச் மாதம் ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகில் உள்ள வாகைகுளம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு தொடக்கப் பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்ததன் காரணமாக இரண்டு மாணவர்கள் காயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, நேற்று முன் தினம் (செப்.13) கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள வி.மாமாந்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் போதிய இட வசதி இல்லாததன் காரணமாக பழுதடைந்த கட்டிடத்தில் வகுப்புகள் நடைபெற்றதாகவும், ஆறாம் வகுப்பு மாணவர்கள் வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்தபோது கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் மூன்று மாணவிகள் உட்பட நான்கு பேருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.
அமைச்சரின் சென்ற ஆண்டு அறிவிப்பிற்குப் பின்னும், பழுதடைந்த கட்டிடங்களுக்கு மாணவ, மாணவியர் அனுமதிக்கப்படுவதும், அங்கு வகுப்புகள் எடுக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. மாறாக கடும் கண்டனத்திற்குரியது. தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கே மேற்படி விபத்திற்கு காரணம் என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது. இதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவச் செல்வங்கள் விரைந்து பூரண குணமடைந்து இல்லம் திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்துக் கொள்வதோடு, தமிழ்நாடு முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, பழுதடைந்த கட்டிடங்களில் மாணவ, மாணவியருக்கு வகுப்புகள் எடுக்கப்படுவதை தடுத்து நிறுத்தவும், ஆசிரியர், மாணவ, மாணவியர் ஆகியோரின் பாதுகாப்பினை உறுதி செய்யவும், இனிமேல் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்’’.
இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.