புதிய கல்விக்கொள்கையில் இணைய அழுத்தம் கொடுக்கும் மத்திய அரசு: அமைச்சர் அன்பில் குற்றச்சாட்டு
தரமான கல்வியை வழங்க நிதியை மறுப்பது ஏன்? இது எந்த விதத்தில் நியாயம்? புதிய கல்விக்கொள்கையில் இணைய மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது.
புதிய கல்விக்கொள்கையில் இணைய மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
முன்னாள் எம்எல்ஏ அன்பில் பொய்யாமொழியின் 25ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு
திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், அவரின் திருவுருவப் படத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:
’’கடந்த 2023- 24ஆம் கல்வியாண்டிலேயே 200 கோடி ரூபாயைக் குறைவாகவே மத்திய அரசு அளித்தது. ஆனாலும் இருக்கும் நிதியை வைத்து, தமிழக அரசு சார்பில் சிறப்பாக செயலாற்றி வந்தோம். என்ன செய்தாலும் சிறப்பாகச் செயல்படுகிறார்களே என்று யோசித்து, மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை கையில் எடுத்தது. நீங்கள் அதை ஏற்றுக்கொண்டால்தான் நிதியை வழங்குவோம் என்று கூறுகின்றனர். அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?
தரமான கல்வியை வழங்க நிதி மறுப்பதா?
தரமான கல்வியை வழங்க நிதியை மறுப்பது ஏன்? இது எந்த விதத்தில் நியாயம்? புதிய கல்விக்கொள்கையில் இணைய மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது.
பள்ளிக் கல்வித்துறையில் தமிழக அரசு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது என்ற முறையில் மத்திய அரசு அதனை ஊக்கப்படுத்த வேண்டுமே என்பதையே மறந்து விடுகிறார்கள். கொள்கை என்பது விவாதம் சார்ந்த கொள்கை. அதற்காக நிதியை நிறுத்துவது நியாயம் அல்ல.
ஜிஎஸ்டியில் இருந்து அனைத்து தொகையும் மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது. கடந்த மூன்று ஆண்டு காலமாக கடுமையான நிதி சுமையில் தமிழக அரசு சமாளித்துக் கொண்டிருக்கிறோம். அதேபோன்றுதான் கல்விக்கான நிதிச் சுமையையும் சமாளிக்க போகிறோம்.
மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்வோம்
கடுமையான நிதி சுமைகள் வந்தாலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்தையும் இந்த அரசும் தமிழக முதலமைச்சரும் செய்வார். மத்திய அரசு நிதி வழங்குவதில் தயக்கம் காட்டினாலும், தமிழக அரசு தாமதம் இல்லாமல், ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கும்’’
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.