Education Budget 2023: நாடு முழுவதும் 157 நர்சிங் கல்லூரிகள், பிராந்திய மொழிகளில் டிஜிட்டல் நூலகங்கள்: பட்ஜெட்டில் கல்வி அறிவிப்புகள் என்ன?
இந்திய நாட்டின் 2023 - 24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கல்வித் துறை சார்ந்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
இந்திய நாட்டின் 2023 - 24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கல்வித் துறை சார்ந்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இதில், நாடு முழுவதும் 157 நர்சிங் கல்லூரிகள், பிராந்திய மொழிகளில் டிஜிட்டல் நூலகங்கள் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடப்பு ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று (31ஆம் தேதி) தொடங்கியது. நாடாளுமன்றத்தின் மரபுப்படி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். இந்த உரை முடிந்ததும் பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று (பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி) 2023 - 24ஆம் ஆண்டுக்கான ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.
கூட்டத்தொடரின் முதல் அமர்வு13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டாவது அமர்வானது மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இந்திய நாட்டின் கல்வித் துறை சார்ந்து பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
’’நாடு முழுவதும் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் உருவாக்கப்படும். 2014 முதல் அமைக்கபட்ட157 மருத்துவக் கல்லூரிகளுடன் சேர்த்து இவை முக்கிய இடங்களில் அமைக்கப்படும். 2047-ல் 0 முதல் 40 வயது வரையிலான மக்களுக்கு இரத்த சோகையை முற்றிலும் ஒழிக்கத் திட்டங்கள் அமல்படுத்தப்படும்.
மருத்துவத் துறையில் ஆய்வுகளை ஊக்குவிக்க புதிய திட்டம் உருவாக்கப்படும்.
ஐசிஎம்ஆர் ஆய்வகங்களை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தரமான புத்தகங்களுடன் தேசிய டிஜிட்டல் நூலகம் மேம்படுத்தப்படும். கொரோனா கால கற்றல் இழப்பைக் குறைக்க, நாடு முழுவதும் பிராந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் டிஜிட்டல் நூலகங்கள் அமைக்கப்படும். குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு இவை உதவிகரமாக அமையும்.
ஆசிரியர் பயிற்சித் திட்டம் புத்தாக்க முறையில் மேம்படுத்தப்படும். ஐசிடி முறை அமல்படுத்தப்படும்.
பழங்குடியின பகுதியில் உள்ள ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளில் அடுத்த 3 ஆண்டுகளில் 38,800 புதிய ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் மத்திய அரசு சார்பில் நியமனம் செய்யப்படுவர். இதன் மூலம் 740 ஏகலைவா பள்ளிகளில் படிக்கும் 3.5 லட்சம் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி வழங்கப்படும்.
எழுத்தறிவு சார்ந்து இயங்கும் தனியார் என்ஜிஓக்களுடன் இணைந்து பாரம்பரிய நூலகங்கள் மேம்படுத்தப்படும். நாட்டின் கடைக்கோடி மக்களுக்கும் எழுத்தறிவு கிடைக்க வழிவகை செய்யப்படும்.
கல்வி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு திறனாய்வு மையங்கள் அமைக்கப்படும்’’.
இவ்வாறு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.