“அரசு உதவிகள் கிடைத்தால் இன்னும் சாதிப்பேன்” - தங்கம் வென்ற தங்கையின் கோரிக்கை நிறைவேறுமா..?
எனக்கு தமிழக அரசு சார்பில் போட்டிகளில் பங்கு பெறுவதற்கும், பயிற்சிகள் பெறுவதற்கும் உதவிகள் கிடைத்தால் இன்னும் பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று சாதனை படைப்பேன்.
தஞ்சாவூர்: மாநில அளவிலான தடகளப் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலம் வென்ற திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் புறத்தாகுடி அரசு உதவிபெறும் பள்ளியை சேர்ந்த மாணவிக்கு பள்ளியின் சார்பில் மாலை அணிவித்து மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாநில தடகளத்தில் தங்கம், வெண்கலப்பதக்கம் வென்றார்
ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப்போட்டியில் சுமார் 37 மாவட்டங்களில் இருந்து பங்கேற்ற 2517 மாணவிகள் கலந்து கொண்டனர் . இதேபோல் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே புறத்தாகுடியில் அமைந்துள்ள அரசு உதவிபெறும் தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு வரலாறு பாடப் பிரிவில் பயிலும் மாணவி மேக்லின் டோரத்தியும் பங்கேற்றார். இதில் மாணவி மேக்லின் 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் மேலும் 1500 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெண்கல பதக்கம் வென்று சாதனைப்படைத்தார்.
மாணவிக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு
போட்டியில் வெற்றி வாகை சூடி ஊருக்கு திரும்பிய மாணவி மேக்லினை பள்ளி சார்பில் மாலை அணிவித்து மேள,தாளங்கள் முழங்க புறத்தாகுடி பேருந்து நிலையத்தில் இருந்து பள்ளி வரை பேரணியாக உற்சாகத்துடன் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் அழைத்து வந்தனர். இந்த உற்சாக வரவேற்புகளுடன் பள்ளிக்கு அழைத்து வந்த மாணவிக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
பொன்னாடை போர்த்தி கவுரவிப்பு
தொடர்ந்து தடகளப்போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்க்கம் பெற்றதற்காக மாணவி மேக்லின் டோரத்தியை பள்ளி தலைமை ஆசிரியர் ராபர்ட் செல்வன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். பின்னர் மாணவி மற்றும் அவரது பெற்றோர், உடற்கல்வி ஆசிரியர் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
அரசு உதவிகள் கிடைத்தால் இன்னும் சாதிப்பேன்
போட்டியில் வெற்றி பெற்றது குறித்து மாணவி மேக்லின் டோரத்தி கூறியதாவது: தற்போது நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலம் பதக்கங்களை வென்றது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. மேலும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு பெற உள்ளேன். வெற்றி பெற தேவையான பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர், ஊக்கம் அளித்த எனது பெற்றோர் மற்றும் உறுதுணையாக இருந்த பள்ளி நிர்வாகத்தினருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு தமிழக அரசு சார்பில் போட்டிகளில் பங்கு பெறுவதற்கும், பயிற்சிகள் பெறுவதற்கும் உதவிகள் கிடைத்தால் இன்னும் பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று சாதனை படைப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பள்ளிக்கு பெருமையை சேர்த்துள்ள மாணவி
மாணவியின் வெற்றி குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ராபர்ட் செல்வன் கூறுகையில், மாணவியின் இந்த வெற்றி எங்கள் பள்ளிக்கு பெரிய அளவில் பெருமையை சேர்த்துள்ளது. மாணவி இதுபோன்று மேலும் பல போட்டிகளில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமையை சேர்ப்பார். அவருக்கு எங்கள் பாராட்டுக்கள் என்றார்.