TNPSC Chairman Incharge: டிஎன்பிஎஸ்சி புதிய தலைவராக சி.முனியநாதன் ஐஏஎஸ் நியமனம்
டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்த பாலச்சந்திரன் ஓய்வுபெற்ற நிலையில், புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்த பாலச்சந்திரன் ஓய்வுபெற்ற நிலையில், புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான அரசுத் துறைகளுக்கான வேலைவாய்ப்புகள் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்தத் தேர்வுகளில் வெற்றி பெறுவது கடினம் என்ற மனப்பான்மையே பெரும்பாலும் இருக்கிறது.
அரசாங்க வேலைக்காக விண்ணப்பித்துவிட்டுக் காத்திருப்போரின் எண்ணிக்கை சராசரியாக 73.6 லட்சமாக இருக்கிறது. இவர்களில் முதுகலை பொறியியல், மருத்துவம், சட்டம் முடித்தோரும் உண்டு.
தனியார் துறைகளில் உச்சப் பதவியில் இருப்பவர்கள்கூட எந்தத் தருணத்திலும் தூக்கி எறியப்படக்கூடிய அபாயத்தில் இருக்கும்போது, அரசு வேலைகளின் பாதுகாப்பான பணி சூழலும், பொருளாதார மீட்பும் மக்களை ஈர்க்கும் அம்சங்களாக உள்ளன.
டிஎன்பிஎஸ்சி பணிவாய்ப்பு
குரூப் 1, குரூப் 2 , 2 ஏ, குரூப் 4 , விஏஓ, குரூப் 3 என குரூப் 8 வரை தமிழகத்தில் பல்வேறு படிநிலைகளில் உள்ள அரசுப் பணிகளுக்குத் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் மூலம் நிரப்பப்படுகின்றன. இதற்காகத் தேர்வாணையம் மூலம் அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. இதைத் தொடர்ந்து, தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிப்பர். அவர்களுக்குப் போட்டித் தேர்வுகள், நேர்முகத் தேர்வு அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது. இந்தப் பணிகளை கவனிக்க, ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பொறுப்பு தலைவராக சி.முனியநாதன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஓய்வு பெற்ற பாலச்சந்திரன்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக இருந்த பாலச்சந்திரன் கடந்த 9-ம் தேதி பணி ஓய்வு பெற்றார். தஞ்சாவூரைச் சேர்ந்த பாலச்சந்திரன் கடந்த 2020ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை, ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி உறுப்பினராக இருந்தவரும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான சி.முனியநாதன் பொறுப்புத் தலைவராகச் செயல்படுவார் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம், முனியநாதன், பேராசிரியர் ஜோதி சிவஞானம், அருள்மதி, ராஜ்மரிய சூசை ஆகியோர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்