TNGASA Admission 2024: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர குவியும் விண்ணப்பங்கள்; 3 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்ப்பு!
TNGASA Admission 2024: மாணவர்கள் மே 6ஆம் தேதி முதல் நேற்று வரை 10 நாட்களில் சுமார் 1.81 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன. இந்த விண்ணப்பங்கள் 3 லட்சத்தைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 140 பாடப் பிரிவுகளில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இங்கு மொத்தம் 1 லட்சத்துக்கு 7 ஆயிரத்து 395 மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. இவற்றில் சேர விண்ணப்பப் பதிவு மே 6ஆம் தேதி தொடங்கியது.
12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியான அன்றே, விண்ணப்பப் பதிவு தொடங்கியது. மாணவர்கள் மே 6ஆம் தேதி முதல் நேற்று வரை 10 நாட்களில் சுமார் 1.81 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிக்க இன்னும் 5 நாட்கள் அவகாசம் உள்ளது, அதாவது மே 20 வரை விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மே 20ஆம் தேதி வரை விண்ணப்பித்த பிறகு, மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் கல்லூரிகளுக்கு மே 24ஆம் தேதி அன்று அனுப்பப்பட உள்ளது. மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு மே 28 முதல் 30 வரை நடைபெற உள்ளது. தொடர்ந்து முதல் பொது கலந்தாய்வு ஜூன் 10 முதல் 15 வரையில் நடைபெற உள்ளது. இரண்டாம் பொதுக் கலந்தாய்வு ஜூன் 24 முதல் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூலை 3 முதல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்க உள்ளன.
மாணவர்கள் https://www.tngasa.in/ என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். Tngasa என்ற பெயரைக் கொண்ட வேறு எந்த இணையதளத்தையும் பார்க்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியத் தேதிகளைப் பார்க்க: https://static.tneaonline.org/docs/arts/UG-Admission-Schedule-2024.pdf?t=1715241912829 என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.
எந்த பாடங்களுக்கு வரவேற்பு?
மாணவர்கள், பல்லாண்டுகளாக ட்ரெண்டிங்கில் இருக்கும் பி.காம். படிப்புக்கு அதிக அளவில் விண்ணப்பித்து வருகின்றனர். தொடர்ந்து கணினி அறிவியல் படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம் இருக்கிறது.
மாணவர்கள் எதிர்பார்ப்பு
இதற்கிடையே பொறியியல் கல்லூரிகளிலும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளிலும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. பிஎஸ்சி படிப்பில் ஏஐ படிப்பு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனினும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான படிப்புகள் இதுவரை அறிமுகம் செய்யப்படவில்லை. இந்தப் படிப்புகள் விரைவில் அறிமுகம் செய்யப்படுமா என்று மாணவர்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.
கூடுதல் விவரங்களுக்கு: https://www.tngasa.in/