TNEA 2025: பொறியியல் படிப்புகளில் சேர மே 7 முதல் விண்ணப்பம்; தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு
TNEA 2025 Registration: மாணவர்கள், பொறியியல் படிப்புகளில் சேர நாளை (மே 7) முதல் விண்ணப்பிக்கலாம்.

பொறியியல் படிப்புகளில் சேர நாளை மறுநாள் (மே 7) முதல் விண்ணப்பப் பதிவு தொடங்க உள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உயர் கல்வி அமைச்சர் கோவி செழியன், மே 7ஆம் தேதி காலை 10 மணிக்கு விண்ணப்பப் பதிவைத் தொடங்கி வைக்க உள்ளார். ஆன்லைன் மூலமாக மட்டுமே மாணவர்கள் விண்ணப்பப் பதிவை மேற்கொள்ள முடியும்.
TNEA 2025-க்கான ஆன்லைன் பதிவை கிண்டி தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தில் உயர்கல்வி செயலாளர் சமயமூர்த்தி, ஐ.ஏ.எஸ். மற்றும் தொழில்நுட்பக் கல்வி ஆணையர் இன்னசென்ட் திவ்யா, ஐ.ஏ.எஸ். ஆகியோருடன் இணைந்து அமைச்சர் தொடங்கி வைப்பார் என பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் புருஷோத்தமன் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 440-க்கும் மேலான பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளுக்கு சுமார் 1.5 லட்சம் இடங்கள் உள்ளன. இவை இணையவழி கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
பொறியியல் கலந்தாய்வு எப்போது?
அதிக மதிப்பெண்களைப் பெறும் மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்தபிறகு, மருத்துவப் படிப்பில் சேர்ந்தால் அங்கு சென்றுவிடுகின்றனர். அந்த பொறியியல் இடம் காலியாவதைத் தடுக்க, கடந்த சில ஆண்டுகளாக மருத்துவக் கலந்தாய்வு நடத்தப்பட்ட பின்னரே பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.
இந்த ஆண்டுக்கான 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாக உள்ளன. கடந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதி வெளியாகின. அன்றைய தினமே பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவும் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.






















