TNEA 2023 Counselling: மாணவர்களே.. பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி விண்ணப்பிக்கலாம்?
இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஜூன் 4) கடைசித் தேதி ஆகும். இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்று பார்க்கலாம்.
இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஜூன் 4) கடைசித் தேதி ஆகும். இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்று பார்க்கலாம்.
தமிழ்நாட்டின் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு இளநிலை, முதுநிலைப் படிப்புகள் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதில் இளநிலைப் படிப்புகளில் மட்டும் 1.5 லட்சம் இடங்கள் உள்ளன. இவை இணையவழிக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.
2023 ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு, டோட் எனப்படும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் நடத்தப்படுகிறது. இது ஜூலை 2 முதல் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை பொறியியல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
மே 5 முதல் விண்ணப்பப் பதிவு
முதலாம் ஆண்டு பி.இ./ பி.டெக். / பி.ஆர்க். பட்டப் படிப்பில் சேர மாணவர்கள் மே 5ஆம் தேதி முதல் விண்ணப்பித்து வருகின்றனர். குறிப்பாகத் தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பப் பதிவு நடைபெற்று வருகிறது.
விண்ணப்ப பதிவுக் கட்டணம்
ஓசி, பிசி, பிசிஎம், எம்பிசி- ரூ.500
எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி- ரூ.250
பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர் டெபிட் கார்டு / Credit Card / நெட் பேங்க்கிங் இணையதள வாயிலாக செலுத்தலாம். இணையதள வாயிலாக பதிவுக் கட்டணத்தை செலுத்த இயலாத மாணவர்கள், " “The Secretary TNEA” payable at Chennai.. என்ற பெயரில் இன்று முதல் வரைவோலையை பதிவுக் கட்டணமாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் (TFCs) வாயிலாக மட்டும் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த நிலையில் இதுவரை சுமார் 2.24 லட்சம் (2,24,073) மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 1,80,301 பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர். 1,49,737 மாணவர்கள் கட்டணம் செலுத்தி, சான்றிதழ்களைப் பதிவேற்றி உள்ளனர். இதற்கிடையே விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய ஜூன் 9 கடைசித் தேதி ஆகும். ஜூன் 6ஆம் தேதி சம வாய்ப்பு (ரேண்டம்) எண் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. நாளை முதல் டிஎஃப்சி மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். தரவரிசைப் பட்டியல் ஜூன் 26ஆம் தேதி வெளியாக உள்ளது.
மாணவர்கள் https://www.tneaonline.org அல்லது https://www.tndte.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பாக https://www.tneaonline.org/user/register என்ற இணைப்பை க்ளிக் செய்து, போதிய விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டியது அவசியம்.
கூடுதல் விவரங்களுக்கு
தொடர்பு எண்: 044 - 2235 1014 / 1015
அழைப்பு எண்: 1800 - 425 - 0110
இ- மெயில் முகவரி: tneacare@gmail.com
பொறியியல் சேர்க்கை குறித்த வழிமுறைகளை முழுமையாக அறிந்துகொள்ள https://static.tneaonline.org/docs/2_Information_Brochure.pdf?t=1685859417072 என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.