TN TRB Exam: பட்டதாரி ஆசிரியர் தேர்வில் எல்லா பாடங்களிலும் தவறான கேள்விகள்: மறுதேர்வு நடத்தக் கோரிக்கை!
2023ஆம் ஆண்டுக்கான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆசிரியர் போட்டித் தேர்வில் பல்வேறு வினாக்கள் தவறாகக் கேட்கப்பட்டு இருப்பதாகக் குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.
2023-2024 ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் , வட்டார வள மைய ஆசிரியர் பணியிடங்களுக்கான தகுதித் தேர்வு கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி அன்று நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இத்தேர்வினை எழுத மொத்தம் 41,478 தேர்வர்கள் விண்ணப்பித்து இருந்தனர். 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்தத் தேர்வை எழுதி இருந்தனர்.
மே மாதம் வெளியான தேர்வு முடிவுகள்
தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் மே 18 மற்றும் 22 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்டன. தேர்வு எழுதிய தேர்வர்களின் மதிப்பெண்களுடன் பணிநாடுநர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2-க்குத் தகுதி பெற்ற ஆண்டுகளின் அடிப்படையில் தகுதி மதிப்பெண்கள் சேர்க்கப்பட்டன. மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில், 1: 1.25 என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டது.
இந்த நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆசிரியர் போட்டித் தேர்வில் பல்வேறு வினாக்கள் தவறாகக் கேட்கப்பட்டு இருப்பதாகக் குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.
குறிப்பாக தமிழில், 48ஆவது கேள்வி உட்பட 6 வினாக்கள் தவறானவை. அதேபோல ஆங்கிலப் பாடத்தில் 13 கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டுள்ளன. குறிப்பாக 121ஆவது கேள்வி தவறானது என்று கூறப்படுகிறது. கணிதப் பாடத்தில் 17 கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டுள்ளன என்று தேர்வர்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
அனைத்து பாடங்களிலும் தவறான கேள்விகள்
அதேபோல இயற்பியல் பாடத்தில் 7 வினாக்களும் வேதியியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளில் 12 வினாக்களும் தவறாக உள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து விலங்கியல் பாடத்தில் இருந்து 3 கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டுள்ளன. புவியியல் பாடத்தில் இருந்து 11 வினாக்கள் தவறாகக் கேட்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வரலாறு பாடத்தில் இருந்து 13 கேள்விகள் தவறானவை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தவறான கேள்விகளைத் தயாரித்த ஆசிரியர் தேர்வு வாரியம், கேள்விகளுக்கு பதிலளித்த தேர்வர்களுக்கு உரிய கருணை மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
உடனடியாக மறுதேர்வு நடத்த வேண்டும்
அதேபோல ஓரிரு கேள்விகள் என்றால் கூட கவனக் குறைவு என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு தேர்விலும் ஏராளமான கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டிருப்பது ஆசிரியர்கள் தேர்வு வாரியத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது என்று தேர்வர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக மறுதேர்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே தேர்வுகாக டிஆர்பி வெளியிட்ட இறுதி விடைக் குறிப்பிலும் 2 தவறுகள் இருப்பதாகத் தேர்வர்கள் சாடி உள்ளனர். 11 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தேர்விலேயே குளறுபடி
2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள், 11 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்வு எழுதிய நிலையில், அதிலும் குளறுபடிகள் ஏற்பட்டிருப்பது அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.trb.tn.gov.in/