TN Students : அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளி மாணவர்கள்; பொதுத்தேர்வு எழுத முடியுமா?- வெளியான தகவல்
அங்கீகாரம் பெறப்படாத தனியார் பள்ளி மாணவர்கள், இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதுவதில் எந்த சிக்கலும் ஏற்படாது என அரசுத் தேர்வுகள் துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
அங்கீகாரம் பெறப்படாத தனியார் பள்ளி மாணவர்கள், இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதுவதில் எந்த சிக்கலும் ஏற்படாது என அரசுத் தேர்வுகள் துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததை அடுத்து, 2022- 23 ஆம் கல்வி ஆண்டு தாமதமில்லாமல் திட்டமிட்டபடி ஜூன் மாதத்தில் தொடங்கியது. வழக்கம்போல நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் தமிழ்நாட்டு மாநிலக் கல்வி வாரியத்தில் படிக்கும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புமாணவர்களுக்கு மார்ச் மாதத்தில் பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளன. குறிப்பாக 12ஆம் வகுப்புத் தேர்வு மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 வரை நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் 7,600 பள்ளிகளில், 8,51,482 மாணவர்கள் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுத உள்ளனர். 11ஆம் வகுப்புத் தேர்வை 7,87,783 மாணவர்கள் எழுத உள்ளனர். மார்ச் 14ஆம் தேதி இவர்களுக்குத் தேர்வு தொடங்கும் நிலையில், ஏப்ரல் 5ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.
தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை
10ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 6ஆம் தேதி அன்று தொடங்குகின்றன. ஏப்ரல் 20ஆம் தேதி வரை இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. சுமார் 10 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத உள்ளதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், 9,38,067 பேர் 10-ம் வகுப்பு தேர்வை எழுத உள்ளதாக இறுதிப் பட்டியல் வெளியாகியுள்ளது.
10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தத் தேர்வினை பள்ளி மாணவர்கள் சுமார் 27 லட்சம் பேர் எழுத உள்ளனர். இவர்களுக்கான ஹால் டிக்கெட் விரைவில் வெளியாக உள்ளது.
பொதுத்தேர்வு எழுதுவதில் எந்த சிக்கலும் இருக்காது
இந்த நிலையில் அங்கீகாரம் பெறப்படாத தனியார் பள்ளி மாணவர்கள், இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதுவதில் எந்த சிக்கலும் ஏற்படாது என அரசுத் தேர்வுகள் துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அங்கீகாரம் இல்லாமல் சில தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அங்கு படிக்கும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதி இல்லை என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், அங்கீகாரம் பெறாத பள்ளி மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத எவ்வித சிக்கலும் ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தைக் கணக்கில் கொண்டு அனுமதி
மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, வேறு பள்ளிகள் மூலமாக அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்று அரசுத் தேர்வுகள் துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதுவதற்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதேபோல எத்தனை பள்ளிகளை அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வருகின்றன என்பது குறித்துக் கணக்கெடுக்கும் பணியும் நடந்து வருகிறது.