TN Semester Exams: தேர்தலுக்கு முன்பாக செமஸ்டர் தேர்வுகள்- அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிவிப்பு
TN Semester Exams 2024:தேர்தலுக்கு முன்பாக கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிவித்துள்ளார்.
தேர்தலுக்கு முன்பாக கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிவித்துள்ளார்.
இந்திய நாட்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பள்ளி பொதுத் தேர்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டன.
பள்ளி பொதுத் தேர்வுகள் எப்போது?
தமிழ்நாட்டு மாநிலக் கல்வி வாரியத்தில் படிக்கும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரை 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, முன்கூட்டியே தேர்வு நடைபெற உள்ளது. 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 4 முதல் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.
மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, முன்கூட்டியே தேர்வு நடைபெற உள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் சுமார் 10 நாட்கள் முன்னதாக தேர்வு நடைபெற உள்ளது.
தேர்வு முடிவுகள் எப்போது?
மே 6ஆம் தேதி 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. அதேபோல மே 10ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் பல்கலைக்கழகங்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் குறித்த அறிவிப்பு (TN Semester Exams 2024) எப்போது வெளியாகும் என்று கேள்வி எழுந்தது. இந்த நிலையில், தேர்தலுக்கு முன்பாக செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’தேர்தலுக்கு முன்பாக செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான பிறகு, அதை அடிப்படையாகக் கொண்டு, செமஸ்டர் தேதிகள் அறிவிக்கப்படும்.
துணை வேந்தர் பணியிடங்கள்
அதேபோல தமிழ்நாட்டில் காலியாக உள்ள 3 பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்’’ என்று உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று துணை வேந்தர் நியமனங்களில் தமிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்து இருந்தார். மேலும் ’’ஆளுநருடன் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லை. அரசியல் தவிர்த்து, நிர்வாக ரீதியாக ஆளுநர் கூறும் கருத்துகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
மாநில கல்விக் கொள்கை எப்போது?
முதலமைச்சர் ஸ்டாலின் நாளை (பிப்.7) தமிழகம் திரும்புகிறார். அவர் வந்ததும் மாநில கல்விக் கொள்கை குறித்த வரைவு அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும். அதற்குப் பிறகு முடிவு எடுக்கப்படும். மாநில கல்விக் கொள்கையை வரும் கல்வி ஆண்டில் அமல்படுத்துவதற்கு நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது. அதில் தாமதம் இருக்காது’’ என்று அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.