நாளை முதல் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு இது கட்டாயம்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு என்னென்ன?
ஆசிரியர்கள், மாணவர்கள் நாளை (ஆகஸ்ட் 1) முதல் செயலி(TNSED App) மூலமே வருகைப் பதிவேட்டை(Attendance register) நிரப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆசிரியர்கள், மாணவர்கள் நாளை (ஆகஸ்ட் 1) முதல் TNSED செயலி மூலமே வருகைப் பதிவேட்டை(Attendance Register) நிரப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பள்ளிக் கல்வித்துறை அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம்சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் உள்ள கூட்ட அரங்கில் 15.07.2022 மற்றும் 16.07.2022 அன்று நடைபெற்றது. கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருள் குறித்தும் அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அனைத்து மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.
இதன் நகல்கள், பள்ளிக் கல்வி அமைச்சர், முதன்மைச் செயலர், சமக்ர சிக்ஷா மாநில திட்ட இயக்குநர், இல்லம் தேடிக் கல்வி சிறப்புப் பணி அலுவலர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்கக இயக்குநர், அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநர், மெட்ரிக் பள்ளி இயக்கக இயக்குநர், பள்ளிச்சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இயக்குநர், பள்ளிக் கல்வி ஆணையரக நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர், பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநர்கள், பள்ளிக்கல்வி ஆணையரக நிர்வாக அலுவலர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த சுற்றறிக்கையில் துறை சார் இயக்குநர்களுக்குப் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன. இதில் முக்கிய அம்சங்களாக,
* 1 ஆகஸ்ட் 2022 முதல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வருகைப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டாம். வருகைப் பதிவை TNSED செயலி வாயிலாகப் பதிவு செய்தால் மட்டும் போதுமானது.
* ஆசிரியர்கள் விடுமுறை விண்ணப்பிப்பதை TNSED செயலியில் மட்டும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட வேண்டும்.
* முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் சுயவிவரங்களை EMIS ஒருங்கிணைப்பாளர் மூலம் பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டும்
* அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் உபரி பணியிடங்களை தேவைப்படும் அரசுப் பள்ளிகளுக்கு மாற்றுப்பணி 15.08.2022 -க்குள்வழங்க வேண்டும்.
* மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு பொறுப்பு தலைமை ஆசிரியர்களை நியமனம் செய்து நிர்வாகம் மற்றும் நிதி செலவினம் மேற்கொள்ள முழு அதிகார ஆணை வழங்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
ஆகியவை குறிப்பிடப்பட்டிருந்தன.
அதேபோல தொழிற்கல்வி இணை இயக்குநருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலில்,
* நோட்டுப் புத்தகம், சீருடைகள் மற்றும் தொழிற்கல்வி பாடப் புத்தகம் பெற்று வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தைக் குறைக்க உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.
* இந்தக் கல்வியாண்டின் இரண்டாம் பருவ நிலைக்குத் தேவையான புத்தகத் தேவைப்பட்டியலை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.
* Special Case Incentive பெறும் மாணவர்களின் விவரத்தை அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாட்டு நலப்பணித் திட்டம் இணை இயக்குநருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலில்,
National Means Merit Scholarship பொறுத்த வரையில் மாணவர்களின் விவரத்தை உடனே சரிபார்த்து அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதில், ஆகஸ்ட் 1 முதல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வருகைப் பதிவேட்டில் பதிவு செய்யக் கூடாது. வருகைப் பதிவை TNSED செயலி வாயிலாக மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்று ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதற்குப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மறுப்பு தெரிவித்திருந்தார். எனினும் தற்போது ஆகஸ்ட் 1 முதல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் TNSED செயலி மூலமாக மட்டுமே வருகைப் பதிவேட்டைப் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல விடுமுறை, தற்செயல் விருப்பு, மருத்துவ விடுப்பு, அனுமதி உள்ளிட்டவற்றையும் ஆசிரியர்கள் இனி செயலி வழியாகவே மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் TNSED செயலி வழியாக பதிவு செய்வதே சிரமமாக உள்ள நிலையில், மாணவர்களின் வருகையைப் பதிவு செய்வது எப்படி என்று ஆசிரியர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்