Half Yearly Exam Postponed: மழை பாதிப்பால் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு?- கல்வித்துறை ஆலோசனை
11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 7ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வை ஒத்திவைக்கலாமா என்று கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் மழை கொட்டித் தீர்த்த நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் தீராத நிலையில், நாளையும் (டிச.6) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2023- 24ஆம் கல்வி ஆண்டில் தமிழ்நாட்டுக் கல்வி வாரியத்தில் படிக்கும் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 7ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
பள்ளிகள் முழுமையாக இயங்க முடியாத சூழல்
2023- 24ஆம் கல்வி ஆண்டில் தமிழ்நாட்டுக் கல்வி வாரியத்தில் படிக்கும் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இந்த அட்டவணையின்படி தேர்வுகள் நடைபெற இருந்த நிலையில், மழை பாதிப்பால் பள்ளிகள் முழுமையாக இயங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதைக் கருத்தில்கொண்டு 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வை ஒத்திவைக்கலாமா என்று கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.
2 வினாத் தாள்கள்
6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2 செட் வினாத் தாள்கள் தயார் செய்யப்பட உள்ளன. அவை தேர்வுக்கு முந்தைய நாள் மதியம் 2 மணிக்கு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன. இதற்கான வினாத் தாள்களையும் கால அட்டவணையையும் எஸ்சிஇஆர்டி எனப்படும் மாநிலக் கல்வியியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கி உள்ளது.
6 முதல் 10ஆம் வகுப்பு வரை தேர்வு எப்போது?
6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 11 முதல் 21ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.