(Source: ECI/ABP News/ABP Majha)
12th Revaluation 2023: பிளஸ் 2 தேர்வு மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்; வழிமுறைகள் இதோ..!
Tamil Nadu 12th Revaluation 2023: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று (மே 8) நடைபெற்று முடிந்த நிலையில், மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று (மே 8) நடைபெற்று முடிந்த நிலையில், மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
மாணவர்கள் இன்று (09.05.2023) முதல் 13.05.2023 (சனிக்கிழமை) மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
ஏதாவது ஒன்றிற்கு மட்டுமே
விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிற்கு மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியும். தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகல் வேண்டுமா? அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா? என்பது குறித்து தெளிவான முடிவு செய்து கொண்டு அதன்பின்னர் விண்ணப்பிக்க வேண்டும்.
அதே நேரத்தில் விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும்.
விடைத்தாளின் நகல் (Copy of the answer script) பெறுவதற்கான கட்டணம்:
ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.275/-
மறுகூட்டல்-I (Re-totalling-I) கட்டணம்
உயிரியல் பாடத்திற்கு மட்டும் - ரூ.305/-
ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.205/-
பணம் செலுத்துவது எப்படி?
தேர்வர்கள் விடைத்தாள்களின் நகலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும்.
விடைத்தாள் நகல் - இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் முறை
விடைத்தாள் நகல் விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் ஊடகங்கள் வாயிலாகவும், www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்படும்.
மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்வது எப்படி?
12.05.2023 முதல் மார்ச்/ ஏப்ரல் 2023 பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மைய தலைமையாசிரியர்கள் வழியாகவும், மதிப்பெண் பட்டியலை (Statement of Marks) பெற்றுக் கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: www.dge.tn.nic.in என்ற இணைய தள முகவரியை க்ளிக் செய்து காணலாம்.