10,12ஆம் வகுப்பு தேர்வு வினாத்தாள் லீக் - CSR பதிவு செய்து விசாரணையை தொடங்கிய போலீஸ்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் வாட்ஸ்அப் மூலம் வெளியானது என முதற்கட்ட விசாரணையில் தகவல்
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 9ஆம் தேதி திருப்புதல் தேர்வு தொடங்கியது. 10 ஆம் தேதி விடுமுறை 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைப்பெற்றது. இன்று 14 ஆம் தேதி பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வும், பன்னிரண்டாம் வகுப்பு கணினி தேர்வு நடக்க உள்ளது. இந்நிலையில் இதற்கான வினாத்தாள்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் வெளியாகி விட்டதாக நேற்று நள்ளிரவு தகவல் பரவியது. இதனால் திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பரபரப்பு எழுந்தது
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருட்செல்வனிடம் கேட்கும்போது;
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நடத்தப்படும் திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் எல்லாம் அந்தந்த மாவட்டங்களிலேயே அச்சரிக்கப்படும் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இதனை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 532 பள்ளிகளுக்கு வினாத்தாள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தேர்வுகள் எல்லாம் வழக்கமாக நடத்தப்படுவது தான், அரசு பொதுத்தேர்வு போன்றது அல்ல அதேநேரம் தனியார் பள்ளியை சேர்ந்த யாரோ ஒருவர்தான் இந்த வினாத்தாள்களை வெளியிட்டு விட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் வந்துள்ளது. இருப்பினும் தவறு யார் செய்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்
அதனை தொடர்ந்து வினாத்தாள்கள் வெளியானதால் தகவல் பரவியதை தொடர்ந்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை அரசு தேர்வுகள் துறை இயக்ககம் சாக்கிரதை செய்துள்ளது. இதுபோன்ற புகார்கள் எழாதவகையில் துறை அதிகாரிகள் கவனமுடன் செயல்பட வேண்டும் என்று அறிவிக்க பட்டுள்ளதாகவும். மேலும் இந்த புகார் எழுந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வினாத்தாள்கள் வெளியானது தொடர்பாக நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் வந்தவாசி தாலுகா கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றின் மூலம் வெளியானது தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வந்தவாசி பகுதியில் உள்ள தனியார் பள்ளி மீது சந்தேகத்தின் அடிப்படையில் பொன்னூர் காவல் நிலையத்தில் செய்யார் மாவட்ட கல்வி அலுவலர் புகார் அளித்துள்ளார். மேலும் திருவண்ணாமலை அரசு பள்ளியில் தேர்வுத்துறை இணை இயக்குநர் பொன்குமார் விசாரணையை தொடங்கினார். திருவண்ணாமலை மாவட்டத்தில் 10, 12 ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்த நிலையில் விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதுகுறித்து காவல்துறையினர் வட்டாரத்தில் பேசுகையில்:- வினா தாள்கள் வெளியானது குறித்து பொன்னூர் காவல்நிலையத்தில் வாட்ஸ் அப்பில் பரவி வருவதாக செய்யார் மாவட்ட கல்வி அலுவலர் புகார் அளித்துள்ளதாகவும் அதன் பெயரில் சிஎஸ்ஆர் பதிவி செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.