THE KID: அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் சிறார் திரைப்படம்.. நவம்பரில் சார்லி சாப்ளின் படம் திரையிடல்!
2023-2024 ஆம் கல்வியாண்டில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.
அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. குறிப்பாக மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது வாரமும் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. திரைப்படங்கள் மாணவர்களுடைய சிந்தனை மற்றும் செயல்பாடுகளில் ஏற்படுத்தும் தாக்கம் அளப்பரியது. இக்காட்சி ஊடகத்தின் வாயிலாக மாணவர்களின் முன்னேற்றம், புதிய பார்வை மற்றும் வாழ்வியல் நற்பண்புகளை மேம்படுத்துவதே இம்முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.
2022-2023 ஆம் கல்வியாண்டில், அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்கள் கண்டுணரும் வகையில் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது வாரத்தில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, 2023-2024 ஆம் கல்வியாண்டில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.
எதற்காக?
மாணவர்கள் தாங்கள் வாழும் சூழலை புரிந்து கொள்ளுதல், பல்வேறு கலாசாரங்களின் தனித்தன்மையை அறிந்து கொள்ளுதல், தன்னம்பிக்கை, நட்பு பாராட்டுதல், குழுவாக இணைந்து செயல்படுதல் பாலின சமத்துவம் உணர்தல் ஆகிய பண்புநலன்களை அடையாளம் காணுதல், தங்களிடம் உள்ளார்ந்து புதைந்திருக்கும் படைப்பாற்றலை வெளிக்கொணரச் செய்தல் ஆகியன இச்சிறார் திரைப்படம் திரையிடுதலின் நோக்கமாக அமைகிறது. மேலும். இத்திரைப்படங்களை கண்ணுறும் மாணவர்களின் விரிசிந்தனை மேம்படுதல் மற்றும் விமர்சிக்கும் திறன் உள்ளிட்ட பண்புகள் பெற இந்நிகழ்வு தூண்டுகோலாக அமைகிறது.
இதனைத் தொடர்ந்து நவம்பர் -2023ல் திரையிடப்படவுள்ள திரைப்படம் 'தி கிட்' THE KID (மெளன திரைப்படம்) ஆகும். 68 நிமிடங்கள் ஓடக்கூடியது.
இயக்கம்: சார்லி சாப்ளின் - இத்திரைப்படத்தின் முதன்மை கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருப்பதோடு இதனை எழுதி, இயக்கி, இசையமைத்து அவரே படத்தொகுப்பும் செய்துள்ளார்.
படம்: சிறு குறிப்பு
"தி கிட்" (1921) திரைப்படம் சார்லி சாப்ளினின் படைப்புகளில் மிகச்சிறந்த ஒன்றாகும். இது அவரது சுயசரிதை படைப்பு ஆகும். இக்கதை சாப்ளின் அவரது குழந்தைப்பருவ அனுபவத்தின் அடிப்படையில் உருவானது. இது ஒரு அமெரிக்க மெளன நகைச்சுவை நாடகத் திரைப்படம்.
நாடோடியான சாப்ளின் ஒரு தாயால் கைவிடப்பட்ட குழந்தையை தயக்கத்துடன் காப்பாற்றுகிறார். அதைத் தொடர்ந்து சாப்ளின் பாணி நகைச்சுவை தொடர்கிறது. காலம் கடக்கிறது, சாப்ளின் அக்குழந்தையை வளர்க்கிறார். தாய் இறுதியில் குழந்தையை திரும்பக் கேட்கும்போது, சாப்ளினும் அவர் வளர்த்த குழந்தை கூகனும் தப்பிக்க முயற்சிக்கின்றனர். அடுத்து என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை! படத்தின்
இசையை சார்லி சாப்ளினே அளித்துள்ளார்.
குழந்தைகளுடன் கருத்துக்கேட்பு அமர்வு
1. இந்த திரைப்படம் உங்களுக்கு பிடித்திருக்கிறதா?
2. இத்திரைப்படத்தின் மையக் கருத்து என்ன?
3. கதை எதைப் பற்றியது? யாரைப் பற்றியது? அதை எப்படி அறிந்து கொண்டீர்கள்?
4. கதையில் நிகழும் மிக முக்கியமான சம்பவங்கள் என்னென்ன?
5. தங்களை மிகவும் கவர்ந்த கதாபாத்திரம் எது?
6. திரைப்படத்தின் வாயிலாக தாங்கள் ஏற்றுக்கொண்ட முக்கிய கருத்துகள் என்னென்ன?
7. இத்திரைப்படத்தில் எந்த ஒரு கதாப்பாத்திரத்திற்கு நீங்கள் பின்னணிக்குரல் கொடுக்க விரும்புவீர்கள். அவ்வாறு விருப்பப்படின், ஒரு நிகழ்வில் அவர் விரும்பும் பாத்திரத்திற்கு பின்னனி குரல் கொடுக்கச் சொல்லலாம்.
1௦. இத்திரைப்படத்தை பற்றி உங்களுக்கு தெரிந்தவர்களுடன் உரையாடுவீர்களா? மற்றும் அவர்கள் இப்படத்தை காண சொல்வீர்களா? ஏன்?
11. இத்திரைப்படம் பற்றி உங்களின் எண்ணங்களை 2 வரிகளில் எழுதுக.
இவ்வாறு சிறார் திரைப்பட நிகழ்வுகள் தொகுக்கப்பட்டுள்ளன.