கல்வி கடன் வழங்கும் விழா: 305 மாணவர்களுக்கு ரூ.23.62 கோடி! உங்களுக்கும் வாய்ப்பு?
உயர்கல்வி பயில விரும்பும் மாணவ, மாணவிகள் வித்யா லட்சுமி என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து கல்வி கடன் வசதியை பெற்று தங்கள் வாழ்வில் முன்னேற வேண்டும்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி ஆகியவை இணைந்து 305 மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கடன் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தின.
உயர்கல்வி பயிலும் மாணவ. மாணவிகளுக்கான இந்த கல்வி கடன் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி , திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி, மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், வருவாய் கோட்டாட்சியர் நித்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க அனைத்து மாவட்டங்களிலும் கல்வி கடன் விழிப்புணர்வு மற்றும் எளிதாக்கல் முகாம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து வங்கிகள் ஒருங்கிணைந்து கல்விக்கடன் வழங்கும் விழாவை நடத்துகிறது. இந்நிகழ்ச்சியில் 11 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் பங்கேற்றுள்ளனர். இம்முகாம் காலகட்டத்தில் மொத்தம் 305 மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் 23.62 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிதியாண்டில் மொத்தம் 1841 விண்ணப்பங்கள் வித்யாலட்சுமி இணையதளம் மூலம் வரப் பெற்றுள்ளது. இதில் இதுவரை 952 விண்ணப்பங்கள் ரூ.7186 கோடி மதிப்பிலான கல்விக்கடன் நமது மாவட்டத்தில் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. 422 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. நமது மாவட்டத்தில் இந்த நிதி ஆண்டில் 2500 மாணவ மாணவிகளுக்கு கல்வி கடன் வழங்க தக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமயில் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை விரைந்து பரிசளிக்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே உயர்கல்வி பயில விரும்பும் மாணவ, மாணவிகள் வித்யா லட்சுமி என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து கல்வி கடன் வசதியை பெற்று தங்கள் வாழ்வில் முன்னேற தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி மற்றும் வங்கி அதிகாரிகள் மாணவ. மாணவிகளுக்கு கடன் உதவிக்கான காசோலைகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் சிவகுமார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதுநிலை மண்டல மேலாளர் சுப்பிரமணியன், நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் துர்கா உமா மகேஸ்வரி முன்னோடி வங்கி மேலாளர் பிரதீப் கண்ணன் மற்றும் 11 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.





















