State Education Policy: மாநில கல்விக் கொள்கை எப்படி இருக்கவேண்டும்?- பொதுமக்களிடம் கருத்துக் கேட்க முடிவு
தமிழகத்துக்கான மாநில கல்விக் கொள்கை எப்படி இருக்கவேண்டும் என்று பொதுமக்களிடம் கருத்துக் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கான மாநில கல்விக் கொள்கை எப்படி இருக்கவேண்டும் என்று பொதுமக்களிடம் கருத்துக் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அறிவித்தது. மாநிலத்துக்கென தனி கல்விக்கொள்கை உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாகத் தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றைத் தமிழக அரசு அமைக்கும்” என அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும்விதமாக, தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைப்பது குறித்து ஆய்வு செய்ய, பின்வரும் குழுவினை அமைத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி குழுவின் தலைவராக புதுடெல்லி உயர் நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி த.முருகேசன் நியமிக்கப்பட்டார்.
உறுப்பினர்கள் யார் யார்?
* பேராசிரியர் எல்.ஐவஹர்நேசன், முன்னாள் துணைவேந்தர், சவீதா பல்கலைக்கழகம்;
* இராமானுஜம், ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர், தேசிய கணித அறிவியல் நிறுவனம்;
* பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்;
* பேராசிரியர் இராம சீனுவாசன், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்;
* முனைவர் அருணா ரத்னம், மேனாள் சிறப்புக் கல்வி அலுவலர், யுனிசெப் நிறுவனம்;
* எஸ்.இராமகிருஷ்ணன், எழுத்தாளர்;
* விஸ்வநாதன் ஆனந்த், உலக சதுரங்க சேம்பியன்.
* டி.எம்.கிருஷ்ணா, இசைக் கலைஞர்;
* துளசிதாஸ், கல்வியாளர்;
* முனைவர் ச.மாடசாமி, கல்வியியல் எழுத்தாளர்;
* இரா.பாலு, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கிச்சான்குப்பம், நாகப்பட்டினம் மாவட்டம்;
* ஜெயஸ்ரீ தாமோதரன், அகரம் அறக்கட்டளை ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இக்குழுவானது புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்து, ஓராண்டு காலத்திற்குள் தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மாநில கல்விக் கொள்கை உருவாக்கக் குழு பொது மக்களிடம் கருத்துக் கேட்க முடிவுசெய்துள்ளது. தமிழ்நாட்டை 8 மண்டலங்களாகப் பிரித்து, கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடைபெற உள்ளன. இந்தக் கூட்டங்களை மாநில கல்விக் கொள்கை குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மேற்கொள்வர்.
மின்னஞ்சல் மற்றும் தபால் மூலமாக பொதுமக்கள் தங்களது கருத்துகளைப் பதிவு செய்யலாம் என்றும் விரைவில் மின்னஞ்சல் மற்றும் தபால் முகவரிகள் வெளியிடப்படும் எனவும் குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதியுமான முருகேசன் தெரிவித்துள்ளார்.
மாநில கல்விக் கொள்கை உருவாக்கக் குழுவின் அடுத்த கூட்டம் ஜூலை 27ஆம் தேதி நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்